1852.

     கருமை யளவும் பொழிலொற்றிக்
          கணத்தீர் முனிவர் கலக்கமறப்
     பெருமை நடத்தி னீரென்றேன்
          பிள்ளை நடத்தி னானென்றார்
     தரும மலவிவ் விடையென்றேன்
          றரும விடையு முண்டென்பா
     லிருமை விழியா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடி.

உரை:

     ஏடீ, சேடி; கரிய மேகங்கள் படியும் சோலைகள் சூழ்ந்த திருவொற்றி நகர்க்கண் சிவகணங்கள் சூழ வுடையீர், திருக்கூத்துக் காண வேண்டுமென்ற முனிவர்கட்குண்டான மனக்கலக்கம் நீங்க தில்லையில் பெருமைமிக்க திருக்கூத்தினை ஆடினீரன்றோ என்றேனாக, என் பிள்ளை நடத்தினான் என்று பிச்சைத்தேவர் உரைத்தார்; இவ்விடையைத் தருவது தருமம் அல்ல என்று நான் சொல்லவும், மை தீட்டிய விழி யிரண்டுடையவளே, என்னிடம் தருமவிடையும் உளது காண் என்றும் சொல்லுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     மை - மேகம். ஒற்றியூரில் உள்ள சிவனடியார்களைச் சிவகணமாகக் கொண்டு “ஒற்றிக்கணத்தீர்” என்று பிச்சைத் தேவரைச் சிறப்பிக்கின்றாள், பலியிடும் நங்கை; வியாக்கிரபாதர், பதஞ்சலி என்ற முனிவர் இருவர் பொருட்டுத் தில்லையம்பலத்தில் சிவபெருமான் திருக்கூத்தாடியதை நினைவிற் கொண்டு, “முனிவர் கலக்கம் அறப் பெருமை நடத்தினீர்” என்று கேட்டாளாக, முனிவரை நாரதர் எனவும், பெருமையைப் பெரிய ஆட்டுக் கிடாயாகவும் கொண்டு, நாரதர்க் கெய்திய மனவருத்தம் நீங்குமாறு யாகத்தில் தோன்றிய பெரிய ஆட்டுக்கிடாயை முருகவேள் ஊர்தியாகக் கொண்டு நடத்திய செய்தியை உட்கொண்டு, “பிள்ளை நடத்தினான்” என்று உரைத்தார். நடத்தினீர் என்பது முன்னதற்கு நடத்தினை யுடையீர் எனவும் பின்னதற்குச் செலுத்தினீர் எனவும் பொருள் படுமாறு காண்க. தானொன்று நினைந்து வினவ, தேவர் பிறிதொன்று நினைந்துரைப்பது முரணாவது கண்டவள், இவ்விடை நேர்மையானதன்று என்று பொருள் படுமாறு, “தருமமல இவ்விடை” என்று சொன்னாள்; அது கேட்டவர், தமக்கு ஊர்தியான திருமாலாகிய விடையை நினைந்துரைக்கின்றாள்; தருமதேவதையும் தமக்கு விடையாகிய ஊர்தியாம் என்பாராய், “தரும விடையும் உண்டு என்பால்” என்றும், மை தீட்டப்படாமையால் இருகண்களாலும் காண்கிலை போலும் என்றற்கு, “இருமை விழியாய்” என்றும் உரைக்கின்றார்.

     இதன்கண், முனிவர் கலக்கமறப் பெருமை நடத்தினீர் என்றாட்குப் பிள்ளை நடத்தினான் என்றும், விடை தருமமல என்றாட்குத் தருமவிடையும் என்பால் உண்டென்றும் உரையாடியவாறு காண்க.

     (81)