1853. ஒசிய விடுகு மிடையாரை
யொற்றி யிருந்தே மயக்குகின்ற
வசியர் மிகநீ ரென்றேனெம்
மகன்கா ணென்றார் வளர்காமப்
பசிய தொடையுற் றேனென்றேன்
பட்ட மவிழ்த்துக் காட்டுதியே
லிசையக் காண்பே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; பிச்சைத் தேவரே, திருவொற்றியூரில் இருந்துகொண்டே, தளருமாறு சிறுத்த இடையையுடைய இளமகளிரை மயக்குகின்ற நீவிர் மிக வசியம் உடையர் என்று சொன்னேனாக, அவர் எம்முடைய மகன்காண் என்று உரையாடினார்; உடற்குள்ளே வளர்கின்ற காமவேட்கையால் புதிய மயக்கம் எய்தப் பெற்றேன் என்றேனாக, பட்டாடையை அவிழ்த்துக் காட்டுவையேல் பொருந்தக் காணலாம் என்று கூறுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
ஒசிதல் - தளர்தல். இடுகும் இடை - சிறுத்த இடை; இடையின் சிறுமை நடையில் தளர்ச்சி பயத்தல்பற்றி, “ஒசிய இடுகும் இடையார்” எனக் குறிக்கின்றார். தேவரின் திருவுருவம் இளமகளிரின் உள்ளத்தை ஈர்த்து வேட்கை பிறப்பித்து மயக்குதல் விளங்க, “மயக்குகின்ற வசியர் மிக நீர்” என்று சொன்னாள். பிறரெல்லாம் நெருங்க வந்து நேர் நின்று மயக்குவாராக, நீவிர் விலகியிருந்தே என்னைப் போன்ற இளமகளிரை வேட்கையுற்று மயங்கச் செய்தலால் மகளிரை வசியம் செய்தலில் மிகவும் வல்லவராக இருக்கின்றீர் என்று பொருள்படுமாறு, “ஒற்றியிருந்தே மயக்குகின்ற வசியர் மிக நீர்” என்று சொல்லுகின்றாள் என்றுமாம். வசியம் செய்பவர் என்ற கருத்தில் வசியர் என்றதை வைசியரான செட்டியைக் குறிப்பதாகக் கொண்டு, “என் மகன் காண்” என்று தேவர் உரைக்கின்றார். முருகப் பெருமானுக்குச் “செட்டி” என்றும் ஒரு பெயருண்டு. “கடற்சூர் தடிந்திட்ட செட்டி” (ஆரூர்) என்று நம்பியாரூரர் குறிப்பது காண்க. பசியதொடை - புதிய மாலை; பசுமை - புதுமை; “பசுமெழுக்கு” (பட்டி. 166) “பசும்புண்” என்பதுபோல. தொடை மாலைக்காய் மயக்கத்தின் மேற்றாயிற்று. பசிய தொடை யென்றது, பச்சை நரம்பு என்று கொண்டு காம நோயால் துடையில் பச்சை நரம்பு தோன்றிற் றென்றதாக மேற்கொண்டு, துடைமேல் அணிந்திருக்கும் பட்டாடையை நீக்கிக்காட்டினால் மெய்ம்மை காணலாம் என்பாராய், பட்டம் அவிழ்த்துக் காட்டுதியேல் இசையக் காண்பேம்” என்று உரைக்கின்றார். பட்டு அம்முச்சாரியை பெற்று பட்டமென வந்ததாம்.
இதன்கண், மகளிரை மயக்குகின்ற வசியர் மிக நீர் என்றாட்கு, என் மகன் என்று தேவர் சொல்லுவதும், பசிய தொடையுற்றேன் என்று மங்கை மொழிவதும், அவிழ்த்துக் காட்டுதியேல் இசையக் காண்பேம் என அவர் உரைப்பதும், இங்கித வுரையாட்டுகளாம். (82)
|