1854. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்
காம மளித்தீர் களித்தணைவீர்
மலையா ளுமது மனையென்றேன்
மருவின் மலையா ளல்லளென்றா
ரலையாண் மற்றை யவளென்றே
னறியி னலையா ளல்லளுனை
யிலையா மணைவ தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; திருவொற்றியூர்க்கண் நிலையாக நின்றவரே, கலைகள் பலவற்றையும் ஆளுதல் உடையீர், காமவுணர்வை யுண்டாக்கி உயிர்த்தொகைகள் தம்மிற் பெருகச் செய்தீர், நினைந்து வழிபடுவோர் பால் அன்புடன் போந்து அருள்வீர், மலையையுடைய மங்கை உம்முடைய மனைவியாவாள் என்று சொன்னேனாக, மருவுமிடத்து மலைபவள் அவலள் என்று சொன்னார்; உம்முடைய மற்றைய மனைவி அலைகளையுடைய கங்கையன்றோ என வினவினேன்; அதற்கு உன் கருத்தை யறியின் வருத்தாதொழியாள்; பின்பு யாம் உன்னை அணைவது இலையாம் என்று இயம்புகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
கலைகள் பலவற்றிற்கும் தலைவராதலால் சிவனைக் கலையாளுடையீர் என்று புகழ்கின்றார்; கலையென்பது மானுக்கும் பெயராதலால், கலைமானைக் கையிலே ஏந்தியாள்பவர் என்ற பொருள்பட, கலையாளுடையீர் என்றார் எனினுமாம். ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் காமுற்றுக் கூடித் தம் இனம் பெருகச் செய்யும் காமவுணர்ச்சியை நல்கினமையை வியந்து “காமம் அளித்தீர்” என வுரைக்கின்றாள். “பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர், விண்பாலி யோகெய்தி வீடுவர் காண் சாழலோ” (சாழல். 9) என மணிவாசகர் உரைப்பது காண்க. நினைந்து வழிபடும் அடியவர்பால் அன்போடு அணைவதை, “தண்முத் தரும்பத் தடமூன்றுடையான் தனை உள்ளிக் கண்முத்தரும்பக் கழற்சேவடி கைதொழுவார்கள், உண்முத் தரும்ப வுவகை தருவான்” (வெண்காடு) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. “காமம் அளித்தீர் களித்தணைவீர்” என்றது, காமவேட்கையை உறுவித்த நீர் அது தீரக் களித்தணைவீர் என்ற கருத்தையும் புலப்படுத்துவதை அறிக. மலை யரையன் மகளான உமாதேவி சிவனுக்கு மனைவியாதல் கண்டு “மலையாள் உமது மனை” என்றாளாக, மனைவியாகிய உமைநங்கை உம்மோடு புலத்தலும் ஊடலும் கொண்டு பிணங்குவாளல்லள் போலும் என்று கேட்டதாகக கருதிக் கொண்டு, கூடலுறுவதாயின் புலவா தொழிவாளல்லள்; ஆனால் கூடுவது கிடையாது என்ற பொருள் புலப்பட, “மருவின் மலையாளல்லள்” என்று கூறுகின்றார். சிவன் உமையோடு பிரியாதுறையினும் மருவிப் பொருந்துவதிலன் என்பதை, “நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தானே” (நல். பெருமணம்) என ஞானசம்பந்தர் நவில்வதனால் அறிக. “அலையாள் மற்றையவள்” என்று கேட்டதை, மற்றைய மனைவியான கங்கை உமையோ டிருப்பதுபற்றி வருந்தமாட்டாள் போலும் என்று உரைத்ததாகக் கொண்டு, கங்கையாகிய நங்கை அறிவுடையளல்ல ளாதலால் வருந்த மாட்டாள்; அறிவுடையளாய் அறிந்தாளாயின் பெண்மைக்கேற்ப வருந்துவள் என்பது விளங்க, “அறிவின் அலையாளல்லள்” என்றும், இவ்வாறு மனைவியர் இருவரைப் பெற்று யாம் கூடுவதில்லை யாதலின், உன்னையும் யாம் சேர்வது இல்லை என உரைப்பாராய், “உனை யாம் அணைவது இலை” என்றும் கூறினராயிற்று.
இதன்கண், உமது மனைவி மலையாளன்றோ என்றாட்கு மருவின மலையாள் என்றும், மற்றையவள் அலையாளன்றோ என்றாட்கு அறிவின் அலையாளல்லள் என்றும், மறுவுதலும் அறிதலும் இன்மையின் உனையாம் அணையோம் என்றும், காமமளித்தீர் களித்தணைவீர் என்றாட்கு உனையாம் அணைவதில்லை என்றும் உரையாடியவாறு.
(83)
|