1855.

     சீலம் படைத்தீர் திருவொற்றித்
          தியாக ரேநீர் திண்மையிலோர்
     சூலம் படைத்தீ ரென்னென்றேன்
          றோன்று முலகுய்ந் திடவென்றா
     ராலங் களத்தீ ரென்றேனீ
          யாலம் வயிற்றா யன்றோநல்
     லேலங் குழலா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூரில் உள்ள தியாகப்பெருமானே, பொய்தீர் ஒழுக்க நெறியைப் படைத்து வழங்கியிருக்கின்ற நீவிர், திண்மை பொருந்திய ஒரு சூலப்படையைக் கையில் ஏந்துகிறீரே காரணம் யாது என்று வினவினேன்; அதற்கு விடையாகத் தோன்றுகின்ற உலகம் உய்தற் பொருட்டு என்று சொன்னார்; ஆலம் பொருந்திய கழுத்தை யுடையரன்றோ நீவிர் என்று கேட்டபோது, ஏலம் கமழும் கூந்தலையுடையவளே, நீ ஆலம் போன்ற வயிற்றை உடையவள் அன்றோ என்று உரைக்கின்றார், இது தான் என்னேடி. எ.று.

     சீலம் - நல்லொழுக்கம்; இறைவன் வகுத்த நல்லொழுக்கம் பொய்தீர் ஒழுக்கம் என திருவள்ளுவர் கூறுகிறார். அந்த ஒழுக்கநெறி நின்றோர் உலகில் நீடு வாழ்வார் எனச் சான்றோர் கூறுவதால் “சீலம் படைத்தீர்” என்று சிறப்பித்துரைக்கிறார். திருவொற்றியூர்க் கோயிலிலுள்ள சிவனுக்கு தியாகர் என்பது பெயர்; பிற்காலத்தார் இறுதியில் ராயர் என்பதை கூட்டி தியாகராயர் என வழங்குவதுண்டு. திண்மை சான்ற சூலப்படை யொன்றைக் கையில் ஏந்துவது எற்றுக்கு என்று வினவலுற்ற நங்கை, “நீர் திண்மையில் ஓர் சூலம் படைத்தீர் என்” என்று கேட்டாள். அவள் கூறியதைத் திண்மையில், சூல், அம்பு அடைத்தீர் என்று கொண்டு திண்ணிய கரிய மேகத்தின் கண் நிறைந்த மழை நீரை அடைத்துப் பொழியச் செய்கின்றீரே, அஃது ஏன் என்று வினவுவதாகப் பொருள் செய்து, தோன்றும் உலகு உய்தற் பொருட்டு என உரைக்கின்றார். நீவிர் கழுத்தின் விடத்தின் கறையுடையீர் என்று கருதி, “ஆலங்களத்தீர்” என உரைத்தாளாக, அவர் நீ ஆலிலை போலும் வயிற்றையுடையளாவாய் என்பாராய்,” “நீ ஆலம் வயிற்றோய் அன்றோ” என்று வினாவெதிர் வினவுகின்றார். ஏலம் - ஏலம் என்னும் மயிர்ச் சாந்து; முன்னை நாட்களில் ஏலமாகிய வாசனைப் பொடி கலந்த எண்ணெயைக் கூந்தலில் பெய்து முடிந்தனர்; ஆதலால் அது பற்றியே ஏலக்குழலாய் என்று கூறுகின்றார்.

     இதன்கண், நீர் திண்மையில் ஒரு சூலம் படைத்தீரே என் என்றாட்குத் தோன்றும் உலகு உய்தல் வேண்டி என்று பிச்சைத் தேவர் விடைக் கூறவும், நீர் கழுத்தில் ஆலம் உடையீர் அன்றோ என்று அவள் வினவ, நீ வயிறு ஆலம் போல் உடையாய் என அவர் கூறினார் என்பது

     (84)