1857.

     வண்மை தருவீ ரொற்றிநகர்
          வாழ்வீ ரென்னை மருவீரென்
     னுண்மை யறியீ ரென்றேன்யா
          முணர்ந்தே யகல நின்றதென்றார்
     கண்மை யிலரோ நீரென்றேன்
          களமை யுடையேங் கண்மையுற
     லெண்மை நீயே யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வளவிய செல்வங்களைத் தருபவராய்த் திருவொற்றியூரின்கண் வாழ்கின்ற பிச்சைத் தேவரே,. எனது உள்ளத்தின் தன்மையை யுணரீராயினும், என்னைச் சேர்வீராக என்று வேண்டினேனாக, யாம் உனது உண்மையுணர்ந்தே ஒற்றி நின்றேம் காண் என்று மொழிகின்றார்; அவரை நோக்கி நீர் கண்ணின் தன்மையான கண்ணோட்டம் இல்லாதவரோ என்று கேட்டேன்; யாம் கழுத்தில் மைந்நிறமுடையேம்; கண்ணிடத்து மையெழுதுதல் எளியளாகிய உனக்கேயாம் என வுரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     வண்மை - வளவிய செல்வம். மருவீர் என்பது, மருவுவீர் என்றும், மருவாமல் விலகுகின்றீர் என்றும் இருபொருள் படுவது. உண்மை, உள்ளத்தில் நிறைந்திருக்கும் காதன்மை எனவும், உள்ளத்தின் தன்மை எனவும் இருபொருள் படுவது. காதன்மை அறியீராயினும் கலந்து மருவுவீராக எனவும், தன்மை யறியீராதலால் மருவாது விலகுகின்றீர் எனவும் பலியிடும் நங்கை உரைத்தாளாக, உண்மையை அறிந்துதான் கூடற்கு இவ்வொற்றி நகர்க்கண் இருக்கின்றேன் என்றும், உண்மை யறிந்து தான் மருவுதலாகாது என்பது பற்றி விலகியுள்ளேம் என்றும், உண்மை யறிந்து தான் மருவுதலாகாது என்பதுபற்றி விலகியுள்ளோம் என்று உரைப்பாராய், “யாம் உணர்ந்தே அகல நின்றது” என்றும் கூறுகின்றார். இது கேட்டும் அமையாத நங்கை, கண்ணின் தன்மையான கண்ணோட்டம் இல்லாதவர்போலும் என்பாளாய், “கண்மையிலிரோ நீர்” என்று வினவுகிறாள். கண்மை யென்றது கண்ணில் எழுதும் மையென்று கருதி, கண்ணிற்கு மையிடுவது ஏழைமைப் பண்புடைய இளமகளிர்க்குரியது; யாம் கண்ணில் மையுறாது விடமுண்டதால் கழுத்தில் கரிய கறையுடையேம் காண் என்பாராய், “களமை யுடையேம் கண்மையுறல் எண்மை நீயே” என்கின்றார்.

     இதன்கண், “என்னை மருவீர், என் உண்மையறியீர்” என்று சொன்னவட்கு, “உண்மை யுணர்ந்தே அகல நின்றது” என்று ஒரு விடையும், “கண்மையிலிரோ” என்று வினவியவட்குக் “களம்மையுடையேம், கண்மையுறல் எண்மை” என்று விடையும் நல்கியவாறாம்.

     (86)