1858. தவந்தங் கியசீ ரொற்றிநகர்
தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
ருவந்தென் மீதிற் றேவர்திரு
வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற்
றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; தவம் புரிதற்கேற்ற தகுதி வாய்ந்த சிறப்புடைய திருவொற்றியூர்க்கண் உள்ள திருக்கோயில்போல என் மனையை எண்ணி வந்த பிச்சைத் தேவரே, தங்களுடைய திருவுள்ளம் உவகையுற்று என்மீது அருள்கொண்டு திரும்பியது போலும் என்று கேட்டாளாக, சிவஞானம் பொருந்துதல் வேண்டி உனது உள்ளம் எம்பக்கம் திரும்பினமையின் அதனைத் தேர்ந்து கொண்டதனாலன்றோ அன்புற்று இங்கு வந்தோம் என வுரைக்கின்றார். இதுதான் என்னையோ. எ.று.
தவம் செய்வோர்க்கு ஏற்ற தகுதியுடையதாதல் ஓர் நகர்க்குச் சிறப்பாதல் பற்றித் “தவம் தங்கிய சீர்” எனவுரைக்கின்றார். “நற்றவம் செய்வார்க்கிடம் தவம் செய்வார்க்கும் அஃதிடம்” (சீவக. 77) என்று அறிஞர் கூறுவது காண்க. சங்கிலி நாச்சியார் ஒற்றியூர்க்கண் இருந்து தவம் செய்த சீர்த்தி குறித்து, “தவம் தங்கிய சீர் ஒற்றிநகர்” என உரைக்கப்படுகிறது என்றுமாம். சங்கிலியார் செய்த தவத்தைச் சிவபெருமானே உவந்து, அவர் கனவில் தோன்றி, “சாரும் தவத்துச் சங்கிலி கேள்” என்று அருளினமை வரலாறு கூறும் உண்மை. திருவொற்றியூர்க்கண் உள்ள துருக்கோயில் இங்கே நகர் எனக் குறிக்கப்படுகிறது. திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் பிச்சைத் தேவர் உருவில் வருவது, பலியிரந்து உண்டற் பொருட்டன்று. மெய்யன்புடையார்க்கு அருள்புரிவது குறித்தது எனச் சான்றோர் கூறுதலால், வரவு கண்டு மகிழும் நங்கை, “உவந்து என்மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ” என்று கேட்கின்றாள். “மனமுலாம் அடியார்க் கருள் புரிகின்ற வகையலாற் பலி திரிந்துண்பிலான்” (ஞான. இலம்பை) என்று பெரியோர் கூறுவது காண்க. தவம் மிக்கவிடத்து இறைவன் அருளுருக் கொண்டு நேரிற் போந்து ஞானம் நல்கும் முறைமைபற்றி, “சிவம் தங்கிட நின் உள்ளம் எம்மேல் திரும்பிற்று, அதனைத் தேர்ந்தன்றே இவர்ந்து இங்கு அணைந்தாம்” என்று கூறுகின்றார். “ஈட்டிய தவத்தினாலே இறை அருளுருவாய் வந்து கூட்டிடும். (சிவப். 68) எனச் சான்றோர் தெரிவிப்பது காண்க.
இதன்கண், தேவர் திருவுள்ளம் உவந்து எம்மீதில் திரும்பிற்றோ என்றாட்கு, நின்னுள்ளம் சிவம் தங்கிட எம்மேல் திரும்பிற்று; அதனைத் தேர்ந்து இவர்ந்து இங்கு அணைந்தாம் என்று தேவர் உரைத்தவாறு. (87)
|