1859. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ
ரொற்றி யுடையீ ரும்முடைய
பொன்னார் சடைமேல் வெள்ளருக்கம்
பூவை மிலைந்தீ ரென்னென்றே
னின்னா ரளகத் தணங்கேநீ
நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
ழென்னா ருலக ரென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; பகைவருடைய மதில் மூன்றையும் எரித்தழித்தவரும் திருவொற்றியூரை யுடையவருமாகிய நீவிர், உம்முடைய பொன்னிறம் கொண்ட சடைமுடியில் வெள்ளெருக்கம்பூவை அணிந்து கொள்கின்றீரே காரணம் என்னையோ என்று கேட்டேனாக, அணங்கு போன்ற பெண்ணே, உன்னுடைய கூந்தலில் நீ நெட்டிப்பூவை அணிந்திருக்கின்றாயே, என்ன காரணம்? அது தாழ்ந்ததென்றும், இது உயர்ந்ததென்றும் உலகத்தார் உரைப்பதில்லை காண், என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று
ஒன்னார் - ஒன்றார் என்பதன் மரூஉ. அன்பால் மனம் ஒன்றுபவர் நண்பர்; ஒன்றாதவர் பகைவர். புரம் - மதில். அசுரராகிய பகைவர் மூன்று மதில்களை யுடையவரென்றும், அவை இரும்பு, வெள்ளி, பொன் என்று மூன்றாலாகியவை என்றும், அவர்களுடைய கொடுமையைப் பொறாத மக்கள் பொருட்டு அவருடைய புரம் மூன்றையும் சிவன் எரித்துச் சாம்பராக்கினார் என்றும் சைவ புராணம் கூறுகிறது. சிவனுடைய சடை செந்நிறம் கொண்டமை பற்றிப் “பொன்னார் சடை” எனப் புகல்கின்றார். “பொன்போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே“ (திருவான்மி) என ஞானசம்பந்தர் பாடுவர். எருக்கம்பூ மணமில்லாதாயினும் சிவன் அணிந்துகொள்வதுண்டு; எருக்கம் கண்ணிக்கொண்டு இண்டை புனைந்திலர்” (இலிங்கபு) என நாவுக்கரசர் உரைப்பது அறிக. காதன்மை மறுக்கப்பட்ட ஆண்மகன் பல்லோர் அறிய மடலூர்தற் பொருட்டு எருக்க மாலை சூடுவன்; “மாவெனமடலும் ஊர்ப, பூவெனக் குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப, மறுகின் ஆர்க்கவும் படுப” (குறுந் . 17) எனக் கூறுவது காணலாம். இக் கருத்தை மனத்திற் கொண்டு, மடலூர்வார் போலச் சடைமேல் எருக்கம் பூவைச் சூடுவது ஏன் என்பாளாய், பலியிடும நங்கை, “உம்முடைய பொன்னார் சடைமேல் வெள்ளருக்கம் பூவை மிலைந்தீர் என்” என்று கேட்கிறாள். அதற்கு விடை கூறுமவர், “அணங்கே, நீயோ, உன் கூந்தலில் நெட்டிப் பூவையணிந்து கொள்கிறாய்” என்பாராய், “அணங்கே, நின் ஆர் அளகத்தே நெட்டி மிலைந்தாய்” என்று எதிர்வினா எழுப்புகின்றார். நெட்டிக்கோரையின் பூவை மனமின்மை கருதி மணமாகா மகளிர் விரும்புவதில்லை. மணமான மகளிர் செருந்தியென விலக்குவதில்லை. பூக்களில் உயர்வு தாழ்வில்லை என்பாராய், “இதில் அது கீழ் என்னார் உலகர்” என்று உரைக்கின்றார். “நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை யெருக்கம்” என்ற புறப்பாட்டின் (106) பழையவுரைகாரர், “நல்லனவென்றும் தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் பூவாதலால் அவை இரண்டினும் வைத்து எண்ணப்படாத குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையையுமுடைய எருக்கம்பூ” எனக் கூறும் உரையை நோக்குமிடத்து, வடலூர் வள்ளற் பெருமான் புறநானூறு முதலிய சங்கவிலக்கியங்களை உரையுடன் படித்திருப்பது நன்கு புலனாகிறது.
இதன்கண், தேவரீர் எருக்கம்பூவைச் சூடுவது என்னென்றாட்கு நீ நெட்டிப் பூவை யணிவது என்னையென்று கூறி, பூக்களில் உலகவர் உயர்வு தாழ்வு கூறுவதில்லை என உரைத்தவாறு. (88)
|