186.

    தனியே துயரில் வருந்தி மனம்
        சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங்
    கினியே துறுமோ வென்செய்கேன்
        என்றே நின்றேற் கிரங்காயோ
    கனியே பாகே கரும்பே என்
        கண்ணே தணிகைக் கற்பகமே
    துனியேய் பிறவி தனை யகற்றும்
        துணையே சோதிச் சுகக் குன்றே.

உரை:

     கனியும் பாகும் கரும்பும் போல் இனிப்பவனும் எனக்குக் கண் போன்றவனு மாகிய முருகப் பெருமானே, தணிகை மலையில் கற்பகம் போல் விளங்குபவனே, வெறுக்கத்தக்க பிறவித் தொடர்பை நீக்குதற்குத் துணை செய்பவனே, ஒளியுடைய இன்பக் குன்றமாய் இலங்குபவனே, தனியனாய்த் துன்பத்தால் வருந்தி மனம் சோர்ந்து மண்ணுலக வாழ்க்கையிற் பிணிப்புண்டு இனி என்ன வருமோ என்று அஞ்சுகிறேன்; முன்னறிந்து தடுத்துக் கொள்ளற்கு யாதும் செய்ய வல்லவனல்லேன்; இவ்வாறு சொல்லிப் புலம்பி நிற்கும் என்பால் இரங்கி அருள் புரிவாயாக, எ. று.

     முருகப் பெருமானிடம் பெறும் இன்பானுபவத்தைக் கனியும் பாகும் கரும்பின் சாறும் எடுத்துக் காட்டி மகிழ்கின்றார். அறிவன அறிதற்கேற்ற அறிவு தருதல் பற்றி, “என் கண்ணே” என வுரைக்கின்றார். வேண்டுவார்க்கு வேண்டும் வரமளிக்கும் திறம் வியந்து “தணிகைக் கற்பகமே” என்று சொல்லுகிறார். இடையறாத் துன்ப முடைமையால் பிறவி வெறுக்கப்படுவது பற்றித் “துனியேய் பிறவி” எனவும், அதனை யடுப்பதும் விடுப்பதும் உயிரின் செயலாதலால் அதற்குத் திருவருள் துணையாவது தோன்றப் “பிறவிதனை யகற்றும் துணையே” எனவும் இயம்புகின்றார். நிரதிசயவின்ப நிலையமாதலாற் “சுகக் குன்று” என்றும், ஞான வொளி பரப்புவதால் “சோதிச் சுகக் குன்றே” என்றும் எடுத்துரைக்கின்றார். அருட்டுணையின்றி யிருப்பதாக நினைக்கின்றா ராதலால், “தனியே துயரில் வருந்தி” என்றும், துயர் மிகு மிடத்து உடலும் உள்ளமும் வெம்மை யுறுவதால், “மனம் சாம்பி” என்றும் கூறுகின்றார். சாம்புதல்-வாடுதல்; சோர்தல். வாடிய பூவைச் சாம்பல் என்பர். “ஆம்பற் பூவின் சாம்பல்” (குறுந்.46) எனச் சான்றோர் வழங்குதல் காண்க. வாழ்க்கைத் தளை - வாழ்க்கைப் பிணிப்பு. வாழ்விற் பிணிப்புண்டு வாழ்வாங்கு வாழ்ந்தாலல்லது உய்தி யில்லையாதலால் “வாழ்க்கைத் தளைப்பட்டு” என்றும், மலமேதுவாக எதிரது அறிவாரா மறைப்பாலும் கழிந்தது மறப்பாலும் இடர் செய்தலால் “இங்கு இனி ஏதுறுமோ என்செய்கேன்” என்றும், நின்று வருந்துவதன்றி வேறொன்றும் செய்யக் கூடாமை நினைந்து மருள்வது தோன்ற, “நின்றேற்கு இரங்காயோ” என்றும் உரைக்கின்றார்.

     இதனால் முன்னும் பின்னும் நின்று இடர் செய்யும் மறைப்பு மறப்புக்களால் வாழ்க்கை துன்பம் செய்வது கூறியவாறாம்.

     (6)