1860.

     கனிமா னிதழி முலைச்சுவடு
          களித்தீ ரொற்றிக் காதலர்நீர்
     தனிமா னேந்தி யாமென்றேன்
          றடங்கண் மடந்தாய் நின்முகமும்
     பனிமா னேந்தி யாமென்றார்
          பரைமான் மருவி னீரென்றே
     னினிமான் மருவி யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     சேடி, ஏடீ; ஒற்றிநகரை விரும்பி யுறைபவரே; கோவைக் கனியை ஒக்கும் வாயிதழையுடைய உமையம்மையின் முலைத் தழும்பு கொண்டு உவகையுற்றவரே; நீவிர் தனித்த மானொன்றைக் கையில் ஏந்துதலால் மானேந்தியாவீர் என்று இயம்பினேனாக, அகன்ற கண்களை யுடைய மடந்தையே; உன் முகமும் குளிர்ந்த மானேந்தியாகும் என்று கூறினார்; உடனே யானும், பரையாகிய மானைக் கூடியுறைகின்றீர் என்று சொன்னேனாக, இனி நீ மால்மருவி என்று உரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     கனியை மானும் இதழ், கனிமான் இதழ் என வந்தது. கனியும் இதழும் இனிதாதலின், கோவைக் கனி பெறப்பட்டது. இதழி - இதழையுடையவள். காஞ்சியம்பதியில் கம்பா நதியில் ஏகம்ப நாதரை வழிபட்டிருந்தபோது நீர்ப் பெருக்கு வரக்கண்டு சிவத்தைத் தன் மார்பின் முலைச் சுவடுண்டாகத் தழுவிய வரலாறு இங்கே குறிக்கப்படுகிறது. அது பற்றியே “கனிமான் இதழி முலைச்சுவடு களித்தீர்” என்று பலியிடும் நங்கை உரைக்கின்றாள். தாருகவனத்து முனிவர் விடுப்ப முழக்கமிட்டு வந்த ஒற்றை மானைச் சிவன் கையில் ஏந்திக் கொண்ட செய்தியை நினைவிற்கொண்டு “நீர் தனிமான் ஏந்தியாம்” என்று மொழிகின்றாள். ஏனை மான்கள் போலாது யாகத்தில் தோன்றிப் பெரு முழக்கத்துடன் வந்தமையால் “தனிமான்” எனச் சிறப்பிக்கப்படுகிறது. “ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு இறுமாந் திருப்பன் கொலோ” (தலையே நீ) என்று நாவுக்கரசர் பாடுவது காண்க. நீர் தனிமான் ஏந்தி என்றாட்கு, நின்முகமும் பனிமான் ஏந்தி என்று இயம்புகின்றார். சந்திரனிடத்துள்ள களங்கத்தை முயல் என்றும், மான் என்றும் குறிப்பதுண்மையின், பனிமான்ற ஏந்தி என்பது, குளிந்த சந்திரனுக்குப் பெயராகிப் பின் சந்திரன் முகத்துக்கு ஒப்பானமையால், முகத்துக்கும் பெயராயிற்று. அது கேட்டவள், பராசத்தியாகிய மான் போன்ற மங்கையைக் கூடியிருக்கின்றீர் என்பாளாய், “பரைமான் மருவினீர்” என்று உரைத்தாள்; அவ்வுரைக்கு ஈடாக, நீ இப்பொழுது மனத்தின்கண் மயக்கமுடையையாயினை என்பாராய், “இனி மான்மருவி” என எடுத்துரைக்கின்றார்.

     இதன்கண், நீர தனிமான் ஏந்தி என்றாட்கு, நின்முகம் பனி மானேந்தி என்றாராக, அவள் மேலும் தொடர்ந்து நீர் பரைமான் மருவினீர் என்று சொல்ல, அவர், நீ இனி மான்மருவி என்று உரைக்கின்றாராம்.

     (89)