1861. சிறியேன் றவமோ வெனைப்பெற்றார்
செய்த தவமோ வீண்டடைந்தீ
ரறியே னொற்றி யடிகேளிங்
கடைந்த வாறென் னினைத்தென்றேன்
பொறிதே ருனது பொற்கலையைப்
பூவார் கலையாக் குறநினைத்தே
யெறிவேல் விழியா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; திருவொற்றியூர்க்கண் உறையும் சுவாமிகளே, தேவரீர் இங்கு என் மனைக்கு வந்தருளியது சிறியளாகிய என் தவப் பயனோ, என் பெற்றோர் செய்த தவப்பயனோ அறிகிலேன்; தாங்கள் இங்கே எதனை நினைத்து வந்தடைந்தீர் என்று கேட்டேனாக, எறிகின்ற வேல் போன்ற கண்களை யுடையவளே, திருமகளைப் போலும் உனது பொற்றொழில் அமைந்த கலையை பூவார் உடையாக்க நினைத்து வந்தேன் என்று உரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
பெரியோர் வரவு கண்டு மகிழ்ந்து பேணும் அன்பர்கள் உரைக்கும் முகமன் வகைகளில் ஒன்று 'வருகை தவப்பயனோ' என்பது; அதனால், “சிறியேன் தவமோ என் பெற்றோர் செய்த தவமோ அறியேன் ஈண்டு அடைந்தீர்” என இயம்புகின்றாள். விசுவாமித்திரன் வரவுகண்ட தசரதன், “நிலம் செய்தவம் என்றுணரின் அன்று நெடியோய் என் நலம் செய்தவம் என்றுணரின் அன்று, நகர் நீயான் வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் குலம்செய் தவம்” என்று கூறுவது காண்க. தவம், இங்கே தவத்தின் பயன்மேல் நின்றது. யாது கருதி அடிகளாகிய தேவரீர் இங்கு வந்தருளியது என்பாளாய், “இங்கு அடைந்தவாறு என் நினைத்து” என்றாட்குத், திருமகள் போலும் உருவுடைய நீ உடுத்திருக்கும் உடை பொற்சரிகை வேலைப்பாடமைந்தது; பூவின் வண்ணம் அமைந்த சேலையை நீ யுடுக்கச் செய்தற்காக வந்தேன் என்பாராய், “பொறிநேர் உனது பொற்கலையைப் பூவார் கலையாக்குற நினைத்து” என மொழிகின்றார். பொறி என்றது புள்ளியெனக் கொண்டு, புள்ளிகள் அமைந்த உனது ஆடையைப் பூவேலை அமைந்த ஆடையாக்குதற் கென்றும், உனது பொன்னாடையைப் பூவாடையாக்குதலை நினைத்தென்றும், உன் பொன்னணிகளில் அமைத்திருக்கும் கலைத்தொழிலைப் பூத்தொடுக்கும் கலைகளில் காட்டுதற்காம் என்றும் உரைத்தலுமாம். பொற்கலையை விடுத்துப் பூவார் கலை யென்பதற்கு மாத்திரம் பல பொருள் கூறல் உண்டு; அஃது இங்கிதமாகாமை யறிந்து கொள்க.
இதன்கண், என் நினைத்து ஈண்டடைந்தீர் என்றாட்கு, உனது பொற் கலையைப் பூவார்கலை யாக்குதற்கென விடையளித்தவாறாம். (90)
|