1862.

     அளிக்குங் குணத்தீர் திருவொற்றி
          யழக ரேநீ ரணிவேணி
     வெளிக்கொண் முடுமே லணிந்ததுதான்
          விளியா விளம்பத் திரமென்றேன்
     விளிக்கு மிளம்பத் திரமுமுடி
          மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
     யெளிக்கொண் டுரையே லென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் அழகரே, வேண்டுவோர்க்கு அருள்புரியும் குணமுடையராகிய நீவிர், அழகிய சடை பொருந்திய வெளிப்படையாக விளங்கும் முடிமேல் அணிந்திருப்பது கெடாத இளம் பத்திரம் என்று சொன்னேன்; விளங்குகின்ற இழையணிந்த பெண்ணே, வீழ்த்தப்பட்ட இளம்பத்திரத்தையும் எமது முடிமேல் அணிந்துள்ளோம்; நீ எளிதாக நினைத்துப் பேசாதே என வுரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     அன்போடு வணங்கி வழிபடுவோர்க்கு அருள் வழங்கும் இயல்பு பற்றி, “அளிக்கும் குணத்தீர்” என்று புகழ்கின்றாள். நீர் அணிவேணி என்பதற்குக் கங்கை தங்கிய சடையெனினும் அமையும். எத்திறத்தாரும் கண்டு கும்பிட விளங்கிய திருமுடி என்றற்கு, “வெளிக் கொள்முடி” என விளம்புகிறாள். அண்டங்கள் அனைத்தையும் தனக்குள் ஒடுக்கி மேம்பட்டுத் திகழும் பரவெளியை இடமாகக் கொண்ட முடியென்றுமாம். நெற்கதிரை அறுக்கும் அரிவாளாகிய பத்திரம்போல் இருத்தலால் இளம்பிறை “இளம் பத்திரம்” என்றும், மேலும் தேயாத பிறை என்றற்கு “விளியா இளம்பிறை” என்றும் சிறப்பிக்கப்படுகிறது. 'பத்திரம்' ஆகு பெயர். பத்திரம் என்பது கொக்கின் இறகுக்கும் பெயராதலின், கொக்குருக்கொண்டு பொருதுபட்ட குரண்டாசுரனுடைய மென்மையான இறகைத் தன் முடிமேல் அணிந்திருப்பதால், அதனைக் கருத்திற் கொண்டு “விளிக்கும் இளம்பத்திரமும் முடிமேலே மிலைந்தாம்” என தேவர் உரைக்கின்றார். மெல்லிய இறகு “இளம் பத்திரம்” என்றும், போரில் வீழ்த்தப்பட்டமை தோன்ற “விளிக்கும் இளம்பத்திரம்” என்றும் சிறப்பிக்கின்றார். பிறையணிதலும் கொக்கின் இறகு சூடுதலும் எளிய செயலென எண்ண வேண்டா என்றற்கு “எளிக் கொண்டு உரையேல்” என்றார்.

     இதனால், நீர் முடிமேல் அணிந்தது விளியா இளம் பத்திரம் என்றாட்கு, எமது முடிமேல் விளிக்கும் இளம் பத்திரமும் உண்டு என உரைத்தவாறாம்.

     (91)