1863. வாசங் கமழு மலர்ப்பூங்கா
வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
நேசங் குறிப்ப தென்னென்றே
னீயோ யாமோ வுரையென்றார்
தேசம் புகழ்வீர் யானென்றேன்
றிகழ்தைத் திரிதித் திரியேயா
மேசங் குறிப்ப தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; நறுமணம் வீசும் மலர்ச்சோலைகளின் வளம் நிறைந்த திருவொற்றியூரையுடைய தேவரே, அன்புள்ளம் கருதுவது யாது என்று வினாவினேனாக, நேசம் விரும்புவது நீயோ நாமோ சொல்லுக என்று என்னைக் கேட்கின்றார்; நாட்டம் விரும்பிப் பரவப்படுபவரே, நான்தான் நேசம் விரும்புகிறேன் என்று உரைத்தேன்; தைத்திரியத்தை ஓதுகின்ற தித்திரி போல்பவளே, நினது சம் குறித்து உரையாடுவது யாமே என அறிக என்று கூறுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
நறுமணப் பூக்களையுடைய மலர்ச்சோலைகள் மிக்கவிடத்து, அவற்றின் இனிய மணம் எங்கும் கமழ்வது இயல்பாதல் பற்றி, வாசம் கமழும் மலர்ப் பூங்கா எனச் சிறப்பிக்கின்றாள்; நேசம் நிறைந்த உள்ளம் கருதுவது யாதாம் எனப் பொதுப்பட மொழிதலின், சிறப்பித்துரைக்க வேண்டி, “நீயோ நாமோ உரை” என்று பிச்சைத் தேவர் கேட்கிறார்; நினது உள்ளமோ, எமது உள்ளமோ, நேசம் விரும்புவது யாது என்றவாறாம். அவர்க்கு விடை கூறலுற்ற நங்கை, எனது உள்ளமே நேசம் விரும்புகிறது என்பாபாளாய், “யான்” என்று கூறினாள். நேசம் என்ற சொல் அன்புடைய சுகம் என்று பொருள்படுவது கொண்டு, அன்பால் விளையும் சுகத்தைக் குறித்து நிற்பது எமது உள்ளம் என்று வற்புறுத்தற்கு “யாமேசம் குறிப்பது” என்று உரைக்கின்றார். கவுதாரியை வட மொழியாளர் தித்திரி என்பர். மீன் குத்திப் பறவையையும் தித்திரி என்பர். ஒரு காலத்தே வியாச முனிவர் சில முனிவர்களை அழைத்துத் தித்திரி பறவை யுருக்கொள்ளச் செய்து அவற்றின் வாயிலாக யசுர்வேதத்தைச் சொல்வித்தார் என்றும், அதனால் அதற்கு தைத்திரியம் என்று பெயர் வந்தது என்றும் வட நூல் அறிஞர் கூறுகின்றார்கள். தைத்திரியத்தை ஓதிய தித்திரி என்றற்குத் “தைத்திரித்திரி” என்றும், அத் தித்திரி போல்வது பற்றிப் பலியிடும் நங்கையைத் “தித்திரியே” என்றும் குறிக்கின்றார்.
இதில் அடங்கிய கதை : வைசம்பாயனர் தமது மாணாக்கரை யுவந்து யசுர் வேதத்தைக் கற்பித்துப் பின்பு அவர் மேல் சினம் கொண்டு கற்றதைக் கக்குமாறு பணிக்க, அவரும் அவ்வாறே செய்ய, அது (கக்கிய வேதம்) தீச்சுடராய் எரியக் கண்ட வியாசர், கவுதாரி முனிவர்களை யழைத்து அத் தீச்சுடரை யுண்டு மீள வுமிழுமாறு செய்தாராக, உமிழப்பட்ட யசுர் வேதம் தைத்திரியம் எனப்படுவதாயிற்று என வைதிக வேதியர் உரைக்கின்றார்கள்.
இதன்கண், நேசம் குறிப்பது என் என்றாட்கு, குறிப்பது நீயோ நாமோ, என்று பிச்சைத் தேவர் கேட்க, அவள் “யான்” என விடையிறுப்பதும், அவளை மறுத்து யாமே சம்குறிப்பதென்பதும் உரைத்தவாறாம். (92)
|