1864. பேசுங் கமலப் பெண்புகழும்
பெண்மை யுடைய பெண்களெலாங்
கூசும் படியிப் படியொற்றிக்
கோவே வந்த தென்னென்றேன்
மாசுந் தரிநீ யிப்படிக்கு
மயங்கும் படிக்கு மாதருணை
யேசும் படிக்கும் மென்கினன்
ரிதுதாறா சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; திருவொற்றியூர்க்கண் உறையும் தலைவரே, சிறப்பாகப் பேசப்படும் தாமரைப் பூவில் இருக்கும் திருமகளுமாகிய இரு பெண்களும் புகழ்ந்துரைக்கும் பெண்மை நலமுடைய பெண்டிர் அனைவரும் கூசும்படியாக இப்படி வந்த காரணம் என்னோ என்று கேட்டேனாக, பெரிய அழகியாகிய நீ இப்படி மனமயங்கும்படியாகவும், ஏனை மகளிர் உன்னைக் கண்டு இகழ்ந்து ஏசும்படி கருதியுமாம் என உரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
திருமகளும், கலைமகளும் தாமரைப்பூவில் இருப்பதுபற்றி கமலப்பெண் எனக் குறிக்கப்படுகின்றார்கள். பெண்மை என்றது, ஈண்டு பெண்கட்குரிய அச்சம் மடம் நாணம் என்ற பண்புடைமை. பிச்சைத் தேவர் ஆடையின்றி வந்தது பெண்கள் கண்டு நாணுமாறு இருந்தமை புலப்படுத்தற்குப் “பெண்கள் எல்லாம் கூசும்படி இப்படி வந்தது” எனவுரைக்கின்றாள். பலியிட வந்த நங்கையின் நலத்தை வியந்த உள்ள முடையார் போல உறையாட்டி லுறுகின்றமை கண்டு கருத்திழந்த குறிப்பைக் கண்டு “மாசுந்தரி” என்றும், உடுத்த கலை நெகிழ அவள் மயங்கினமை தோன்ற “இப்படிக்கு மயங்கும் படிக்கும்” என்றும், அவள் நிலைகண்ட மற்றை மகளிர், ஏனையோர்க்கு மான முண்டாக்குதலால் வெகுண்டு ஏசுகின்றமை புலப்பட “மாதர் உனை ஏசும்படிக்கும்” என்றும் விடை கூறுகின்றார். பலியிடும் மகளிர் பெண்மையிழந்த நிலையை, “அண்ணல் மேனி கண்டார்வமுற் றாடை போய்ப் பெண்ணின் நீர்மைப் பெருங்குறி மூடியும் கண்ணை மூடியும் கைக்கடங்காமையால் விண்ணை மூடினார்போல் வெள்கினார் சிலர்” (கந்த. ததீ. உத்த. 67) எனப் புராணிகர் கூறுவது காண்க.
இதன்கண், மகளிர் கண்ணையும் கருத்தையும் கவரும் உருவத்துடன் நிருவாணியாய்ப் பலிவேண்டி வந்த பிச்சைத் தேவரைக் கண்டு இப்படி வந்தது என்னென்று வினவிய நங்கைக்கு, “நீ இப்படி மயங்கும் படிக்கும் ஏனை மாதர் உனை ஏசும்படிக்கும் வந்தேம்” என்று உரையாடியவாறாம். (93)
|