1865.

     கொடியா லெயில்சூ ழொற்றியிடங்
          கொண்டீ ரடிகள் குருவுருவாம்
     படியா லடியி லிருந்தமறைப்
          பண்பை யுரைப்பீ ரென்றேனின்
     மடியா லடியி லிருந்தமறை
          மாண்பை வகுத்தா யெனிலதுநா
     மிடியா துரைப்பே மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; கொடி கட்டிய மதில்கள் சூழ்ந்த திருவொற்றி நகரை இடமாகக் கொண்ட அடிகளாகிய நீவிர், ஆசிரியர் உருக்கொண்டு கல்லாலின் கீழ் இருந்து அம்மறைகளின் முடிவாய பொருளை உரைப்பவரன்றோ என்று வினவினேனாக, நின்னுடைய மடிப்பமைந்த ஆல் போன்ற வயிற்றின் கீழ் உள்ள மறைந்த உறுப்பாய தன் மாண்பை வெளியே தோன்றக் காட்டுவாயாகில், யான் அந்த மறைப்பொருளைக் கடிதலின்றி உரைப்பேம் என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     நகரங்களின் மதிற்சுவரில் கொடிகள் கட்டுவது பண்டை நாளைய மரபு. மன்னர் போர் வேட்டெடுப்பது அக் கொடி என்பர். “செருப்புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி” (முருகு) என்று நக்கீரர் நவில்வது காண்க. ஒற்றியூரைத் தமக்குரிய இடமாகக் கொண்டமை பற்றி “ஒற்றியிடம் கொண்டீர்” என உரைக்கின்றாள். பெரியோர்களை அடிகள் என்பது மரபு. சிவன் குருபரனாய்த் தோன்றிக் கல்லாற்கீழ் இருந்து சனகர் முதலிய நால்வர்க்கு மறைநூல் உய்த்துணர வுரைக்கும் நுண்பொருளை உணர்த்தின வரலாற்றை நினைவிற்கொண்டு, “குருவுரு வாம்படி ஆல்அடியில் இருந்தமறைப் பண்பை யுரைப்பீர்” எனக் கேட்கின்றாள். உருவாம்படி - உருக்கொண்ட படிவம். ஆல் - ஆலமரம். “நால்வர் கேட்க நல்லறத்தை, ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்ன தென்னே” (சேய்ஞ்) என ஞானசம்பந்தர் கூறுவர். 'அம்மறை' என்றவிடத்து, மகரவொற்றுத் தொக்கது. செயற்குரிய பொருளாதலால் மறைப்பொருள், “மறைப் பண்பு” எனப்படுகிறது. வயிற்றின் மேற் காணப்படும் தோல் மடிப்பை “மடி” எனவும், வயிறு ஆலிலை போறல் பற்றி “ஆல்” எனவும், வயிற்றிற்குக் கீழேயுள்ள நிதம்ப வுறுப்பை “அடியில் இருந்த மறை” எனவும், அதன் உரு நலத்தை “மாண்பு” எனவும் குறிக்கின்றார். நிதம்பத்தையும், அதனைப் புறத்தே தெரியாதபடி மறைத்திருக்கும் ஆடையையும் வேறாக விலக்கிக் காட்டுவாயெனில் என்றற்கு, “வகுத்தாய் எனில்” என வுரைக்கின்றார். இறந்த காலம் வற்புறுத்தற் பொருட்டு. வகுத்துக்காட்டலாகாத உறுப்பைக் காட்டுவது குற்றமெனக் காண்போர் இடித்துரைப்பார்; யாம் அது செய்யேம் என்பாராய், “இடியா துரைப்பேம்” என்று கூறுகின்றார்.

     இதன்கண், ஆல் அடியில் இருந்த மறைப்பண்பை யுரைப்பீரன்றோ என்றாட்கு, நின் ஆல்போல் வயிற்றின் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்துக் காட்டினால் உரைப்போம் என, விடையிறுத்தவாறாம்.

     (94)