1866.

     என்னே ருளத்தி னமர்ந்தீர்நல்
          லெழிலா ரொற்றி யிடையிருந்தீ
     ரென்னே யடிகள் பலியேற்ற
          லேழ்மை யுடையீர் போலுமென்றே
     னின்னே கடலி னிடைநீபத்
          தேழ்மை யுடையாய் போலுமென
     வின்னே யங்கொண் டுரைக்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; நல்ல அழகிய ஒற்றியூர்க்கண் இருக்கின்றவரே, எனது நேர்மையான மனத்தின்கண் உறைபவரே, அடிகளாகிய தாங்கள் மனைதோறும் போந்து பலியேற்பது ஏன்? ஏழ்மையுடையீர் கொல்லோ என்று கேட்டேனாக, கடல் சூழ்ந்த உலகின்கண் இப்பொழுது நீயன்றோ பத்தாகிய ஏழ்மை யுடையையாய் உள்ளாய் என்று இனிய அன்பு காட்டி யுரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     நேர்மை பொருந்திய உள்ளம் இறைவனுறையும் இனிய இடமாம் என்பது பற்றி “என்னேர் உளத்தில் அமர்ந்தீர்” என்றும், வணங்கத்தக்க பெருமையுடையவர் என்று புலப்பட “அடிகள்” என்றும் உரைக்கின்றாள். “அடிகளாகிய தாங்கள் வீடுதோறும் பலி யேற்பது ஏனோ, நீர் வறுமையால் ஏழ்மை யுடையரல்லவே” என்பாளாய், “அடிகள், என்னே பலியேற்றல், ஏழ்மை யுடையீர் போலும்” என்று வினவுகின்றாள். நாற்றிசையும் கடல்சூழ நடுவே நிலவுலகுண்மை பற்றி, அதனைக் “கடலினிடை“ என்றும், பலியிடும் நங்கை பிச்சைத் தேவர்பால் காமக் காதலாய்க் கருத்திழந்த நிலையில் உரையாடுவதறிந்து, “இன்னே” என்றும், தேவசத்துவ முதலிய பத்து வகை மெய்ப்பாடுகளால் காம மயக்கத்து அறிவின்மை புலப்பட நிற்றலின் “நீ பத்து ஏழ்மையுடையாய்” என்றும் உரைக்கின்றார். தேவசத்துவம், மானிட சத்துவம். நாக சத்துவம், இயக்க சத்துவம், காந்தருவ சத்துவம், பைசாச சத்துவம். அசுர தத்துவம், காக சத்துவம், குரங்கு சத்துவம், கார்த்தப சத்துவம் எனச் சத்துவம் பத்தாதல் அறிக. அறிவின்மை, ஏழைமை எனவும் ஏழ்மை யெனவும் வருமென அறிக. இன்னேயம் - இனிமையான அன்புறவு. பத்தேழ்மை யுடையாய் என்பதற்குக் காமம் காரணமாகப் பிறந்த பற்றாகிய ஏழ்மையுடையாய் என்பதும் ஒன்று. பற்று,. பத்தென வழங்குதலு முண்டு.

     இதன்கண், பலியேற்றலால் ஏழ்மையுடையீர் என்று கேட்டவட்கு, நீ பத்தேழ்மை யுடையவள் என இகழ்ந்துரைத்தவாறு.

     (95)