1867. நல்லார் மதிக்கு மொற்றியுளீர்
நண்ணு முயிர்க டொறுநின்றீ
ரெல்லா மறிவீ ரென்னுடைய
விச்சை யறியீர் போலுமென்றேன்
வல்லா யறிவின் மட்டொன்று
மனமட் டொன்று வாய்மட்டொன்
றெல்லா மறிந்தே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; நல்லவர்கள் மதித்துப் பரவும் திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, இவ்வுலகிற் பிறவியடைந்த உயிர்தோறும் நிற்பவரே, நீவிர் எல்லாம் அறிவீரென்றாலும் என்னுடைய விருப்பத்தை அறியாதவராக இருக்கின்றீர் என்று வினாவினேனாக, அவர் என்னை நோக்கி, சொலல் வல்லவளே, உனது அறிவின் அளவேயன்றி
மனத்தளவும் வாயளவும் மெய்யளவும் ஆகிய எல்லாம் அறிந்துள்ளேம்” என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
நல்லார் - நல்லொழுக்கமுடையோர். நல்லறிவும் நற்செயலும் உடையோர் வாழ்வது பற்றி “நல்லோர் மதிக்கும் ஒற்றியுளீர்” எனவும், சிவபெருமானே பிச்சைத் தேவராய் வருகின்றார் என்ற கருத்தால் “நண்ணும் உயிர்கடொறும் நின்றீர்” என்றும், நின்று ஆங்காங்கு நிகழ்வனவற்றை யெல்லாம் எஞ்சாமல் அறிவது பற்றி, “எல்லாம் அறிவீர்” என்றும் உரைக்கின்றாள். அறிவுடையோர் அறிவதன் பயன், அறிந்து ஆவன செய்தலும் ஆகாதென நீக்குதலுமாகும்; அம்முறையில் என்பால் இருந்து வருத்தும் காமவிச்சையைப் போக்காதொழிகின்றீர் என்பாளாய், “என்னுடைய இச்சை அறியீர்” என்று கூறுகின்றாள். “எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை யறியீர்” என்று மொழிந்த நயம் கண்டு வியந்தமை புலப்பட, “வல்லாய்” எனப் பாராட்டி, உன் மனமொழி மெய்களின் எல்லையளவும் முற்ற அறிந்துளோம் என்பாராய், “அறிவின் மட்டொன்று மனமட்டொன்று வாய்மட்டொன்று எல்லாம் அறிந்தேம் என்கின்றார்.” மெய்யும் சிறந்ததோர் அறிகருவி யாதலின், அதனை அறிவினுள் அகப்படுத்தி, “அறிவின் மட்டொன்று” என்று குறித்தொழிந்தார். அறிவும் மனமும் வாயும் மெய்யும் வேறுவேறு செயலாய் வேறுவேறு அளவில் தொழிற்படுவனவாயினும், யாம் எல்லாவற்றையும் நீக்கமற நிறைந்து நின்று அறிவோம் என்பது தோன்ற, ஒன்று ஒன்று எனப் பிரித்தோதினார் என்றலும் ஒன்று.
இதன்கண், எல்லாம் அறிவீர் எனது இச்சையறியீர் என்றாட்கு, உனது இச்சை செல்லும் கரணங்களின் எல்லை முற்றும் நன்கறிவோம் என்று விடை கூறியவாறாம். (96)
|