1868. மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம்
வல்லீ ரொற்றி மாநகரீர்
பொறிசே ருமது புகழ்பலவிற்
பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்
குறிநே ரெமது விற்குணத்தின்
குணத்தா யதனால் வேண்டுற்றா
யெறிவேல் விழியா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; திருவொற்றியூரை யுடையவரே, தடுக்கப்பட்ட கங்கையாறு தங்கிய சடையை யுடையராய், சித்திகள் பலவும் உடையராக விளங்குபவரே, ஏட்டிற் பொறிக்கப்படுகின்ற உம்முடைய புகழ்மிக்க குணங்கள் பலவற்றுள் பொருந்துகிற குணமே வேண்டும் என்று சொன்னேனாக, எறியப்படும் வேல் போன்ற கண்ணை யுடையவளே, குறித்த குறிக்கு நேராக வளைந்து அம்பைச் செலுத்தும் எமது வில்லின் குணத்தை யுடையவளாதலால், அதனையே வேண்டலுற்றாய் என்று உரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
மறி நீர் - தடுக்கபடும் நீர்ப்பெருக்கு; ஈண்டு கங்கை யாற்றைக் குறிக்கிறது. அணிமா முதலிய சித்திகள் அனைத்தையும் செய்ய வல்லவர்; மதுரையில் எல்லாம் வல்ல சித்தராய்த் திருவிளையாடல் புரிந்ததை நினைவிற் கொண்டு, “சித்தெல்லாம் வல்லீர்” என உரைக்கின்றாள் பலியிடும் நங்கை. புகழ்க்குரியார் பீடும் பெயரும் பெருஞ் செயலும் ஏட்டுலும் கல்லிலும் பொறிப்பது இயல்பாதல் பற்றிப் “பொறிசேர் உமது புகழ்” என்றும், புகழ்க்குரிய பலவாகிய குணங்களில் எமக்குப் பொருந்துவனவற்றை அருளுக என வேண்டுவாளாய், “பலவிற் பொருந்தும் குணமே வேண்டும்” என்றாளாக, பலவற்றுள் ஏந்துகிற வில்லுக்குப் பொருந்திய குணம் வேண்டப்பட்டதாக எண்ணிக் கொண்டு, வில்லாகிய பொன்னுக்கு வெம்மை மிக்க போது உருகுதலும் ஒளிமிகுதலும் குணமாம்; காமவேட்கை மிக்கவிடத்து நெஞ்சுருகுதலும் மேனியொளிர்தலும் ஆகிய குணத்தை விரும்புவாயாயினை என்பார், “எமது விற்குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய்” என்று விடை கூறினார். இறைவன் பொன்னாகியபோது உருகி யொளிமிகுவதும், வில்லாகிய போது வணங்கி நேர்பட்டார்க்குத் தீங்கு செய்வதும் குணமாம். அதுபோல் அன்பு மிக்கவழி உள்ளம் உருகி மேனி கதிர்த்து ஒளி செய்தலும், இச்சைக்கிணங்கினாரை வளைத்து வருத்தத்துக்கு உள்ளாக்குவதும் பெண்ணாகிய உனக்குக் குணமாயின; அதனால்தான் இறைவன் வில்லுக்குப் பொருந்திய குணங்களையே வேண்டலுற்றாய் என உரைத்தாரென அறிக.
இதன்கண், உமது விற்பொருந்தும் குணமே வேண்டும் என்றாட்கு, நீ விற்குணத்தின் குணத்தாயதலால் அதனை வேண்டுற்றாய் என்றவாறாம். (97)
|