1869.

     ஊரூ ரிரூப்பி ரொற்றிவைத்தீ
          ரூர்தான் வேறுண் டோவென்றே
     னோரூர் வழக்கிற் கரியையிறை
          யுன்னி வினவு மூரொன்றோ
     பேரூர் தினையூர் பெரும்புலியூர்
          பிடவூர் கடவூர் முதலாக
     வேரூ ரனந்த மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; ஒற்றியூரை ஊராக வைத்தவரே, ஊர்தோறும் கோயில் கொண்டிருப்பவரே, உமக்கென வேறு ஊர் உண்டோ என்று கேட்டேனாக, ஓர் ஊரினும் முற்றும் வழங்குதற்கரியையாகிய நீ சிறிது எண்ணி அறிய வினவும் ஊர் ஒன்றல்ல, பேரூர், தினையூர், பெரும்புலியூர்,. பிடவூர், கடவூர் முதலாக அழகமைந்த ஊர்கள் முடிவில்லனவாகும் என்று இயம்புகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     ஒற்றியூரை ஓர் சிறப்புடைய ஊராகக் கொண்டவரே என்ற கருத்தால் ஒற்றி வைத்தீரே என்றும், இதுபோல வேறு ஊரை வைத்துள்ளீரோ என்பாளாய் ஊர்தான் வேறுண்டோ என்றும் வினவியதை, இவ்வூரை ஒற்றிவைத் தொழிந்தமையின் வேறே உமக்கென ஓர் ஊர் உளதோ என்று கேட்டதாகக் கொண்டு, பெண்ணாதலால் ஓர் ஊர்க்குள்ளேயே முற்ற வழங்குதற்கில்லாத நீ மனத்தின்கண் சிறிதுபோது நினைந்து வினவுதற்கு ஊர் ஒன்றேனும் உண்டோ? இல்லை; எமக்கோ எனின், வேறு ஊர்கள் ஒன்றல்ல அனந்தம் என்பாராய், “பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக ஏரூர் அனந்தம்” என்றும், எமக்கென்றே நன்மையுற அமைந்த ஊர் எண்ணிறந்தன என்பாராய், “ஏரூர் அனந்தம்” என்றும் கூறினாராம். பேரூர் - இதனை “மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூர்” (புலியூர்) என்று நம்பியாரூரர் பாராட்டுவர். தினையூரை, “நம்புவிடை, ஆங்குந்தினை யூர்ந்தருளாய் என்றென்பர் தொழு, தோங்கும் தினையூர்” என்றும், பெரும்புலியூரை, “மைத்த, கரும்புலியூர்க் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும், பெரும்புலியூர்” என்றும், கடவூரை, “வண்மையிலாச், சொற்கடவி மேலோர் துதித்தலொழியா தோங்கும் நற்கடவூர் வீரட்டம்” என்றும் வள்ளற் பெருமான் புகழ்ந்துரைப்பர். பிடவூர்: வைப்புத் தலங்களில் ஒன்று.

     இதன்கண், “ஒற்றிவைத்தீராதலின் ஊர் வேறுண்டோ என்றாட்கு, ஊர் ஒன்றோ, எமக்கு ஏரூர் அனந்தம் என்று உரை கூறியவாறாம்.

     (98)