187.

    குன்றே மகிழ்ந்த குணக்குன்றே
        கோவே தணிகைக் குருபரனே
    நன்றே தெய்வ நாயகமே
        நவிலற் கரிய நல்லுறவே
    என்றே வருவா யடருவாய்
        என்றே புலம்பி யேங்குற்றேன்
    இன்றே காணப் பெறி லெந்தாய்
        இறவேன் பிறவே னிருப்பேனே.

உரை:

     குன்றுகள் பொருந்திய குறிஞ்சி நிலத்தில் விரும்பி யுறையும் குணக் குன்றமாகிய முருகப் பெருமானே, தலைவனே, திருத்தணிகையில் எழுந்தருளும் குருபரனே, நன்றே புரியும் தெய்வ நாயகமே, சொல்லுதற் கரிய நல்ல உறவே, எப்போது வந்து உனது திருவருளைச் செய்வாய் என்று எதிர்நோக்கிப் புலம்பி யேங்குகிறேன்; இப்பொழுதே உன்னைக் காணும் பேறு பெறுவேனாயின், இறப்பதும் பிறப்பதுமாகிய செயலுக் காளாகாமல் திருவருட் போகத்தில் நிலைத்திருப்பேன், காண், எ. று.

     முருகன் குறிஞ்சிக் கடவுள் என்பது பற்றிக், “குன்றே மகிழ்ந்த குணக் குன்றே” என்று கூறுகின்றார். நற்குண வுருவாய் நிலை பெறுவது பற்றிக் “குணக் குன்றே” என்று குறிக்கின்றார். பரமசிவனுக்குப் பிரணவப் பொருளை யுரைத்த நிகழ்ச்சி காரணமாகக் “குருபரன்” என்று கூறுகிறார். குரு மூர்த்தங்களில் மேலானவன், குருபரன். தெய்வங்கட்குத் தலைமை தாங்குவோனாதலால். “தெய்வ நாயகம்” என்கின்றார். உயிர்க்குயிராவது நோக்கி உறவு ஒன்றும் கூறலாகாமையின், “நவிலற்கரிய நல்லுறவே” என வுரைக்கின்றார். நேரிற் கண்டு திருவருள் பெற ஆர்வம் பெருகுகின்றமை புலப்பட, “என்றே வருவாய் அருள் தருவாய் என்று புலம்பி ஏங்குற்றேன்” எனவும், இப்பொழுது தோன்றி அருள் புரிந்தாலும் யான் பிறப்பிறப் பில்லாத பேரின்பப் பெருவாழ்வில் இருந்து மகிழ்வேன் என்ற கருத்தால், “இன்றே காணப்பெறில் எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே” எனவும் இயம்புகின்றார்.

     இதனால் முருகன் திருவருளை நேரிற் கண்டு பெறுதற்கண்ணுள்ள ஆர்வ மிகுதி எடுத்துரைத்தவாறாம்.

     (7)