1870.

     விழியொன் ணுதலீ ரொற்றியுளீர்
          வேதம் பிறவி யிலரென்றே
     மொழியு நுமைத்தான் வேயீன்ற
          முத்த ரெனலிங் கென்னென்றேன்
     பழியன் றணங்கே யவ்வேய்க்குப்
          படுமுத் தொருவித் தன்றதனா
     லிழியும் பிறப்போ வென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; ஒற்றி நகரில் உள்ளவரே, கண்பொருந்திய ஒள்ளிய நெற்றியை யுடையவரே, பிறப்பில்லாதவர் என உம்மை வேதங்கள் மொழிய, மூங்கில் ஈன்ற முத்தர் என உம்மைச் சொல்வதற்கென்ன காரணம் என்று வினவினேனாக, அணங்கு போன்ற பெண்ணே, அதனாற் குறை சிறிதும் இல்லை; அம்மூங்கிலிடத்திற் பிறக்கும் முத்து வித்தாய் வேறு மூங்கில் பிறத்தற்குக் காரணமாவதில்லை; அதனால் முத்தின் தோற்றம் இழிக்கத்தக்கதன்று என்று கூறுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     விழியொன்று பொருந்தியதினால் சிவனுடைய நெற்றி பொற்புக் குன்றுவதில்லையாதலால், “விழி யொண்ணுதலீர்” என்று விளம்புகின்றாள். பிறவா வாழ்க்கையையுடைய பெரியோன் சிவன் என்று அறிவு நூல்கள் உரைப்பது பற்றி, “வேதம் பிறவியிலர் என்று நுமை மொழியும்” என உரைக்கின்றாள். வேதம் என்றது, இருக்கு முதலிய நான்கையுமன்று; அவற்றிற்குச் சிவபரம் பொருளைப் பற்றி ஒன்றும் தெரியாது. சைவ உபநிடதங்கட்குத்தான் தெரியும். உபநிடதங்களை வேதாந்தம் என்பர். இங்கே அவை வேதம் எனப்படுகிறன. “பிறப்பாதி யில்லான்” எனவும், “பிறப்போ டிறப்பென்றும் இல்லா தான்காண்” என்றும் தமிழ் மறைகள் ஓதுவதறிக. திருநெல்வேலித் தலபுராணம், அக்கோயிலிற் காணப்படும் வேணுவன நாதரை “வேய் முத்த நாதர்” என்று வழங்குகிறது. அதனை நினைவிற்கு கொண்டுதான் “வேயீன்ற முத்தர் எனல் இங்கு என்” என்று பலியிடும் நங்கை வினவுகின்றாள். பழி, இங்கே குறையென்னும் பொருள்பட வந்தது. அணங்கு போல்வாளை 'அணங்கு' என்றார். வேய் - மூங்கில். மூங்கிற் கணுக்களில் தோன்றும் முத்து. வித்தாய் வேறு முத்தோ மூங்கிலோ தோன்றுதற்குக் காரணமாகாமையால் முத்து பிறப்பின்பாற் படுவதன்று; அதுபற்றியே “வேய்க்குப்படு முத்து ஒருவித்தன்று” என்றும், அதனால் சிவன் முத்தாய்த் தோன்றியது பிறப்பென்று எண்ணி இழிக்கப்படுவதன்று என்பது விளங்க, “அதனால் இழியும் பிறப்போ” என்றும் உரைக்கின்றார்.

     இதன்கண், சிவனது பிறப்பாக நினைத்து, வேய்முத்த நாதர் எனல் என் என்று வினாவினாட்கு, வேய்முத்து ஒரு வித்தன்று அதனால் பிறப்பாய்ப் பழிக்கப் படுதற்கு இடமில்லை என்று விளக்க செய்தவாறாம்.

     (99)