1871.

     விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர்
          விளங்குந் தாம மிகுவாசத்
     தண்ணார் மலர்வே தனையொழிக்கத
          தருதல் வேண்டு மெனக்கென்றேன்
     பண்ணார் மொழியா யுபகாரம்
          பண்ணாப் பகைவ ரேனுமிதை
     யெண்ணா ரெண்ணா ரென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ளவரே, எனக்குண்டாகிய வேட்கை வெப்பத்தைத் தணித்தற் பொருட்டு உமது மார்பில் கிடந்து விளங்கும் மாலையிடத்து மிக்க மணம் கமழும் குளிர்ந்த மலரை எனக்குத் தரல் வேண்டும் என்று கேட்டேனாக, பண்ணின் இனிமையமைந்த சொற்களை யுடையவளே, உபகாரம் ஒன்றும் செய்யாத பகைவராயிருப்பினும், இதனை எண்ணமாட்டார் என்று அடுக்கிச் சொல்லுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     மிகவுயுர்ந்த மரங்கள் நிற்கும் சோலை என்றற்கு “விண்ணார் பொழில்” என்று சொல்லுகின்றாள். விண்ணென்பதற்கு மேகம் என்று பொருள் கொள்ளின் 'மேகம் தவழும்' பொழில் என்பதாம். தாமம் - மாலை இது மார்பில் அணிவது. தலையில் சூடுவது 'கண்ணி' யெனப்படும். தலைவனது மார்பின் மாலை வாங்கியணிவதில்தான் காதல் மகளிர்க்கு விருப்பம் உளதாவது; அது பற்றியே மலர்மாலையை வேண்டுகிறாள். 'மிகுவாசத் தண்ணார் மலர் விளங்கும் தாமம்' என மாற்றி இயைக்க. மிக்க மணம் பொருந்திய குளிர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்டு விளங்கும் மாலையெனப் பொருள் கொள்க. விரக வேதனையைப் போக்கற்கு என்பாளாய், “வேதனை யொழிக்கத் தண்ணார் மலர் வேண்டும்” என்று கேட்கின்றாள். கேட்குமிடத்து, “தண்ணார் மலர் வேதனை” என்று கேட்கவும், காமனுடைய தண்ணியமலரம்புகள் செய்யும் வேதனை என்று பொருள்படுமாறு அக்கூற்று அமைந்தது; அதனைச் செவியேற்ற பிச்சைத் தேவர், “மலர்வேதன்” என்று கொண்டு, தாமரை மலர்மேல் இருந்து வேதமோதும் பிரமனைக் குறிப்பதாகக் கொண்டு, அவன் பார்ப்பானாதலின், அவனைக் கொடிய பகைவரும் கொல்வது அறமாகாதெனக் கூறும் உலகுரையை எடுத்துக் காட்டி மறுப்பாராய், “உபகாரம் பண்ணாப் பகைவரேனும் வேதனை யொழிக்க விரும்பும் இச்செயலை எண்ணார் எண்ணார்” என உரைக்கின்றார். அடுக்கு: வலியுறுத்தற் பொருட்டு.

     இதன்கண், மலர்வேதனை யொழிக்கத் தரல் வேண்டும் என்றாட்கு, அதனைப் பகைவரும் எண்ணார் என மறுத்தவாறாம்.

     (100)