1872. செம்பான் மொழியார் முன்னரெனைச்
சேர்வீ ரென்கோ திருவொற்றி
யம்பார் சடையீ ருமதாட
லறியே னருளல் வேண்டுமென்றேன்
வம்பார் முலையாய் காட்டுகின்றா
மன்னும் பொன்னா ரம்பலத்தே
யெம்பால் வாவென் றுரைக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; திருவொற்றியூரில் உள்ள கங்கை தங்கிய சடையையுடையவரே, இனிய பால்போன்ற சொற்களையே பேசும் ஏனை மகளிர் முன்பு நின்று என்னைச் சேர்வீராக என்று சொல்வேனா? சொல்லுதல் இயலாத தன்றோ? உமது திருவிளையாடலை அறியேன்; எனக்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டினேனாக, கச்சணிந்த கொங்கையை யுடையவளே, எமது ஆடல் நலத்தை நீ அறியக் காட்டுவேம்; நீ நிலைத்த பொன்னம்பலத்தில் எம்முன் வருக என்று கூறுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
சிவக்கக் காய்ந்த பால் இனிமை மிக்கதாதல் பற்றிச் 'செம்பால்' என்று சிறப்பித்து மொழிகின்றார். பால் போலும் மொழியாரைப் பான் மொழியார் என்றார். காதலன் முன்னே தனித்து நிற்கும்போதும் இதனை யுரைக்கலாற்றாத மங்கையர், ஏனை மகளிர் முன்னர் உரைப்பதென்பது ஆகாத செயலென்றற்குச் “செம்பொன் மொழியார் முன்னர் எனைச் சேர்வீர் என்கோ” என வுரைக்கின்றாள். அம்பு - நீர்; ஈண்டுக் கங்கைமேற்று. தனது உள்ளத்தில் வேட்கை தோற்றுவிக்கும் முறையில் உரையாடுவதும் ஒழுகுவதும் தேவர்க்கு விளையாட்டாக இருப்பதாக நினைக்கின்றாளாதலின் “உமது ஆடல் அறியேன்” என்றும், அறிவித்தல் வேண்டும் என்பாளாய், “அருளல் வேண்டும்” என்றும் சொல்லுகின்றாள். அவள் “ஆடல்” என்றதைத் தாம் அம்பலத்தே புரியும் அருட்கூத்து என்று கொண்டு, எமது ஆடற்கருத்து நீ அறிய வேண்டுமாயின், பொன்னம்பலத்தில் ஆடிக் காட்டுகின்றோம், அங்கு வா என்பாராய், “காட்டுகின்றோம், பொன்னார் அம்பலத்தே என்பால் வா” என்று உரைக்கின்றார்.
இதன்கண், உமது ஆடல் அறியேன் என்றாட்கு, அறியக் காட்டுகின்றாம் பொன்னார் அம்பலத்தே எம்பால் வா என, விடையிறுத்தவாறாம். (101)
|