1873.

     மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி
          வைத்தீ ருண்டோ மனையென்றேன்
     கைக்க ணிறைந்த தனத்தினுந்தங்
          கண்ணி னிறைந்த கணவனையே
     துய்க்கு மடவார் விழைவரெனச்
          சொல்லும் வழக்கீ தறிந்திலையோ
     வெய்க்கு மிடையா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூரை ஏற்ற ஊராகக் கொண்டவரே, கருமை நிறம் கொண்ட கழுத்தையுடையவரே, உமக்கு மனையுண்டோ என்று கேட்டேனாக, கைந்நிறைந்த பொன்னினும் கண்ணிறைந்த கணவனையே காமவின்பம் துய்க்கும் இளமகளிர் விரும்புவரென உலகவர் சொல்லும் வழக்கமாகிய இதனை அறியாயோ, சிறுகும் இடையை யுடையவளே என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     நஞ்சுண்டமையால் கறுத்த கழுத்துடைமைபற்றி “மைக்கொள்மிடற்றீர்” என மொழிகின்றாள். உமக்கு ஏற்ற ஊராகிய இதனை ஒற்றி வைத்தீராயினும், இங்கு உமக்கென நல்ல மனையுண்டோ என்பாளாய், “ஊரை ஒற்றிவைத்தீர் உண்டோ மனை” என்று வினவுகின்றாள். விடை கூறலுற்ற பிச்சைத் தேவர், மனையென்றதை மனைவி யென்று கொண்டு, கண்ணிறைந்த கணவனையே விரும்பும் மனைவி எனக்குண்டு என்பாராய், “கைக்கண் நிறைந்த தனத்திலும் தம் கண்ணிறைந்த கணவனையே துய்க்கும் மடவார் விழைவரெனச் சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ” என்று சொல்லுகிறார். பொன்னிறம் கொண்டு பொலியும் என் மேனியழகு மகளிர்க்குக் கண் நிறைந்த காட்சி தந்து இன்பம் பயத்தலின், எனக்கு மனைவி இல்லாமலில்லை என்று இதனாற் கூறாமல் கூறுகின்றார். 'எய்க்கும் இடை' என்றவிடத்து எய்த்தல் சுருங்குதல்; சிறுத்தலுமாம். துய்க்கும் மடவார் - போக நுகர்ச்சிக்குரிய பருவ மங்கையர்; மடவார் என்பதில் மடமை, இளமை மேற்று. இளமகளிர் கணவரின் செல்வ வறுமை நோக்காமல் கண்ணிறைந்த கட்டழகை நோக்குவாராக, நீ ஒற்றியூரின் பெயர்ப் பொருளை நோக்கிப் பேதுறவு மொழிதல் கூடாது என்பது எடுத்துக் காட்டிய உலக வழக்கால் உய்த்துணர நிற்பது காண்க.

     இதன்கண், ஊர் ஒற்றி வைத்தீராதலின் உண்டோ மனை என்றாட்கு, தாம் விரும்பும் கணவரது கட்டழகு நோக்காது அவருடைய ஊரும் மனையும் நோக்குவது மகளிர்க்குரிய வழக்கன்று என்று விடையிறுத்தவாறாம்.

     (102)