1874.

     ஆறு முகத்தார் தமையீன்ற
          வைந்து முகத்தா ரிவர்தமைநான்
     மாறு முகத்தார் போலொற்றி
          வைத்தீர் பதியை யென்னென்றே
     னாறு மலர்ப்பூங் குழனீயோ
          நாமோ வைத்த துன்மொழிமன்
     றேறு மொழியன் றென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; ஆறு முகங்களையுடைய குமரவேளைப் பெற்ற ஐந்து முகமுடையராகிய இவரை, விருப்பமில்லாதவர் போல ஒற்றியூரைப் பதியாகக் கொண்டது என்னோ என்று வினவினேனாக, மணம் கமழும் பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளே, நீயோ நாமோ பதியாக வைத்தது? நீ உரைப்பது மன்றுடையார் ஏற்கும் மொழியாகாதுகாண் என்று கூறுகின்றார்; இது தான் என்னே. எ.று.

     சிவனுக்கு முகம் ஐந்து கூறுப: அவை ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்பனவாம். ஆறு முகமுடையார்க்கு கை பன்னிரண்டாதல் போல், ஐந்து முகமுடைய சிவனுக்குத் தோள் பத்தாவதில்லை; எட்டே என அறிக. “எண் தோள் வீசி நின்றாடும் பிரான்” (தலையே நீ) என்று சான்றோர் கூறுவது காண்க. மாறு முகத்தார் - கருத்து வேறுபடுபவர். வேறு ஊர்களில் விருப்பின்றித் திருவொற்றியூரையே பதியாகக் கொண்டதற்குக் காரணம் யாது என்று வினவுவாளாய், “ஒற்றிவைத்தீர் பதியை என்” என்று கேட்கிறாள். 'ஒற்றியிற் பதியை வைத்தீர்' என மாறுக. பதி - நிலையாக உறையும் இடம். பதியாக வைத்தவர் உன்னை யுள்ளிட்ட உலகரேயன்றி “வைத்தது நீயோ நாமோ” என்று கூறி, மன்றின்கண் உரைத்தால் உலகுரையை இறைவன் மொழியெனக் கொள்ளார் அறிவுடையார் என்று வற்புறுத்தற்கு “உன் மொழி மன்று ஏறும் மொழியன்று” என்று வற்புறுத்துகின்றார். பதியை ஒற்றி வைத்தது என்னோ என்று கொண்டால், ஒற்றி வைத்தவர் நாம் அன்று; ஒற்றியூர் என்று உலகு வழங்குவதொழிய மன்றத்தார் ஏற்கும் சான்றாகிய ஒற்றிக்கலம் (இலை) இல்லை என்பதாம்.

     இதன்கண், ஒற்றியூரிற் பதியை வைத்தது என்னென வினாவினாட்கு, வைத்தது நாமன்று; நீவிர் கூறுவதன்றி மன்று ஏற்கும் மொழியின்று என்று கூறியவாறாம்.

     (103)