1875.

     வள்ளன் மதியோர் புகழொற்றி
          வள்ளா லுமது மணிச்சடையின்
     வெள்ள மகண்மேற் பிள்ளைமதி
          விளங்க லழகீ தென்றேனின்
     னுள்ள முகத்தும் பிள்ளைமதி
          யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
     யெள்ள லுடையா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வளவிய அறிவுடையோர் புகழும் திருவொற்றியூரில் உறையும் வள்ளலாகிய உம்முடைய சிவந்த மணியின் நிறத்தையுடைய சடையிலுள்ள நீர் மகளாகிய கங்கையின் அருகில் பிறைமதி விளங்குவது அழகிதாகவுளது என்றேனாக, எள்ளிப் பேசும் குறிப்புடையவளே, உன் உள்ளத்திலும் சிறுமையுணர்வு, ஒளிதிகழும் நின் முகத்திலும் சிறுபிறை யுடையை யாகின்றாய் என்று இயம்புகின்றார், இதுதான் என்னே. எ.று.

     வள்ளல்: ஈண்டு வளமை குறித்தது; வள்ளால், விளியேற்ற உயர்திணைப் பெயர். சிவந்த மணிபோலும் நிறமும் ஒளியும் கொண்டிருப்பது பற்றி மணிச்சடை என்று உரைக்கின்றாள் பலியிடும் நங்கை. வெள்ளம் - தண்ணீர். வெள்ள மகள் - கங்கை. பிறைத் திங்கள் மேலும் வளரும் இயல்பிற்றாதல் கொண்டு “பிள்ளைமதி” என்பர். பிறைத்திங்கட்கு நிறைந்த ஒளியின்மை பற்றி இகழ்ந்துரைக்கும் குறிப்பால் “விளங்கல் அழகிது” என உரைக்கின்றாள். அழகிது என்பது அழகீது என நீண்டது. பிறைத் திங்களைப் பிள்ளைமதி யென்றது இகழ்ச்சிக் குறிப்புடையதாதல் கண்டு விடையிறுக்கும் பிச்சைத்தேவர், எள்ளற் கருத்தைத் தாம் உணர்ந்து கொண்டமை தோன்ற, “எள்ளல் உடையாய்” என்று சொல்லி, உன் உள்ளத்தில் எழும் உணர்வு சிறுமையுடையது என்பாராய், “உள்ளமுகத்தும் பிள்ளைமதி” என்று இகழ்ந்து கூறுகிறார். 'உள்ளமுகம்' என்றவிடத்து, முகம் ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வந்தது. ஒளி திகழும் உன்னுடைய நெற்றி பிறை போல்வது என்பார், எள்ளற் குறிப்பே தோன்ற “ஒளிகொள் முகத்தும் பிள்ளைமதி” என உரைக்கின்றார். நெற்றியும் முகத்தின் கூறாதலின், முகம் என்றார்.

     இதன்கண், சடையிற் கங்கைமேல் பிள்ளைமதியுளது என்றாட்கு, உன் உள்ளத்திலும் முகத்திலும் பிள்ளைமதியுள்ளன காண் என்று கூறியவாறாம்.

     (104)