1876. உள்ளத் தனையே போலன்ப
ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
கள்ளத் தவர்போ லிவணிற்குங்
கரும மென்னீ ரின்றென்றேன்
மெள்ளக் கரவு செயவோநாம்
வேட மெடுத்தோம் நின்சொனினை
யெள்ளப் புரிந்த தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடி.
உரை: ஏடீ, சேடி; உள்ளத்தில் அன்னை போன்ற அன்புடையவர்கள் உவந்து போற்றும், திருமகள் உறையும் ஒற்றியூரில் உள்ளவரே, மனத்திற் கள்ளமுடையார் போல இவண் வந்து நிற்கும் கருத்தை இப்போது இன்னதென உரைக்கின்றிலீரே என்று கேட்டேனாக, மெல்ல மெல்லக் கரவு செய்தற்கோ நாம் தவவேடம் எடுத்தோம்? அன்று; நின்னுடைய சொல்லே நின்னை எள்ளி யிகழச் செய்கிறது, காண், என்று உரைக்கின்றார். இது தான் என்னே. எ.று.
தாயன்புடைய மெய்யன்பர்களை “உள்ளத் தனையேபோல் அன்பர்” என உரைக்கின்றார். ஏனையோர் அன்பிற் போலத் தாய் அன்பில் பொய்ம்மை கலவாமைபற்றி அதனை விதந்து கூறுகின்றார். செல்வ வளம் குன்றாமை தோன்றத் “திருவாழ் ஒற்றி” எனச் சிறப்பிக்கின்றார். பலி வேண்டி வந்தார்க்கு அதனை இடுவதை விடுத்து, மனத்திற் கள்ள முடையார்போல வந்து இவண் நிற்பதுடன், காரியமும் இது வென்று சொல்லுகின்றீரில்லை என்பாளாய், கள்ளத்தவர்போல் இவண் நிற்கும் கருமம் 'என்னீர் இன்று' என்று கேட்கின்றாள். 'கள்ளத்தவர்போல் நீர் இன்று, இவண் நிற்கும் கருமம் என்' என இயைத்துரைப்பிணுமாம். 'கள்ளத்தவர்' என்பதை அகத்தே கள்ள நினைவும் புறத்தே சிவக்கோலமும் உடைய தாபதர்களைக் குறித்ததாக மேற்கொண்டு, “மெள்ளக் கரவு செயவோ நாம் வேடம் எடுத்தோம்” என்றும், “நின்சொல் நினை எள்ளப் புரிந்தது” என்றும் இயம்புகின்றார். கரவு - வஞ்சனை; கள்ளத்தொழில் மறைந்து செயற்கும் மறைத்தொழுகுதற்கும் கரவுச் சொல் பொருந்துவதாம். ஓகாரம்: எதிர்மறை. உள்ளத்துண்மை யுணராமல் எமது தோற்றத்தைக் கள்ளத் தவவேடம் என இகழ்ந்தது, உன் மனத்தின் கள்ளத்தன்மையை வெளிப்படுத்தி உன்னை இகழ்ந்து பேசுமாறு என்னைச் செயற்படுத்துகிறது என்பாராய், “நின் சொல் நினை எள்ளப் புரிந்தது” எனவுரைக்கின்றார். வேடம் கண்டு ஏத்துதற்குரிய நீ, கருத்திற் கரவுகொண்டு உரையாடியது, நின்னை மறுத்து யாம் எள்ளி நகையாடற்கு ஏதுவாயிற்றென்றாராம்.
இதன்கண், கள்ளத்தவர்போல் வந்து நிற்கும் கருமம் இன்ன தென்னீரே என்று கேட்டாட்கு, நின் சொல் நின் கள்ளத்தன்மை புலப்படுத்து யாம் நின்னை எள்ளப் புரிந்தது என்று விடை கூறினார் என்பது. (105)
|