1877. அச்சை யடுக்குந் திருவொற்றி
யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
விச்சை யடுக்கும் படிநம்பான்
மேவினோர்க்கிவ் வகில நடைப்
பிச்சை யெடுப்பே மலதுன்போற்
பிச்சை கொடுப்பே மலவென்றே
யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; மக்களுருவில் வந்தருளும் திருவொற்றியூரவராகிய பிச்சைத் தேவர்க்கு பிச்சையிடுமின் என்று சேடியர்க்குச் சொன்னேனாக, ஞானம் எய்துமாறு நம்மை யடைபவர்க்கு இவ்வுலக நடை பயக்கும் பிச்சினை யாம் எடுத்தொழிப்பதன்றி, உன்னைப்போல் பிச்சினைக் கொடுக்குமவரல்ல என்று தமது விருப்பத்தை எடுத்துரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
அச்சு - மக்களுடம்பு. “அச்செல்லாம் ஒன்றாய் அதிலே யிருவகையாய் வைச்சதென்ன சோணகிரி வள்ளலே” (அருண. அந்.) என்று பெரியோர் உரைப்பது காண்க. தவமுடைய நன்மக்கட்கு மக்களுருவிற் போந்து ஞான மருளுதல் சிவனது அருட்செயலாதலால் “அச்சை யடுக்கும் திருவொற்றியவர்” எனத் தெரிந்துரைக்கின்றாள். ஏற்பவர் பெரியவராவதுபற்றி “பிச்சை கொடும்” என்று சொன்னாள். ஞானம் வேண்டிச் சிவனை யன்பால் அடைபவர்க்கு அவர் சிவஞானம் அருளும் முறைமைபற்றி, “விச்சை அடுக்கும்படி நம்பால் மேவினர்க்கு” என்று கூறுகின்றார். விச்சை யென்றது, சிவஞானமாகிய வித்தையை. ஞானம் அருளுமிடத்து, உயிரின்க்கட் படிந்திருக்கும் உலகியற் பற்றினையும் அதற்கேதுவாகிய தற்போத மறைப்பினையும் துடைத்தருளும் செயலை “உலக நடைப் பிச்சை எடுப்பேம்” எனக் கூறுகின்றார். எடுத்தல், ஈண்டுக் கொள்ளற் பொருட்டாகாது களைதற் பொருட்டென அறிக. உலகியல் வாழ்வு இனிது நடைபெறற்கு அமைந்தவை யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்கள். வாழ்வில் பொருளும் அறிவும் செய்து கோடற்கு யான் என்னும் பற்றும், செய்து கொண்டவற்றைப் பேணிப் பயன் கொள்ளற்கு எனது என்னும் பற்றும் இன்றியமையாதவை. அவை உலகியலை நோக்கியிருத்தலால் அவற்றைப் பற்றி நிற்கும் பேராவிருப்பத்தை உலகநடைப் பித்து என்பர். பித்து என்பதைப் பிச்சு என்பது உலக வழக்கு. பிச்சை யெடுப்பேம் என்பது, பித்துணர்வை எடுத்துக் களைவோம் என்னும் பொருளது. மகளிர் நல்குவது காமப்பித்து என்பது கற்றாரும் கல்லாரும் ஆகிய எல்லாரும் அறிந்ததாதலால், “உன் விருப்பம்; அருளுள்ளமுமாம். எடுப்பாய் உரைத்தல் - துணிந்துரைத்தல்.
இதன்கண், பிச்சை கொடுமின் என்றாட்கு யாம் பிச்சை யெடுப்பதன்றிப் பிறர்க்கு உன்பால் கொடுப்பே மல்லேம் என உரைத்தவாறாம். (106)
|