1878.

     அள்ளற் பழனத் திருவொற்றி
          யழக ரிவர்தம் முகநோக்கி
     வெள்ளச் சடையீ ருள்ளத்தே
          விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்
     கொள்ளக் கிடையா வலர்குமுதங்
          கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு
     மெள்ளத் தனைதா வென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடி.

உரை:

     ஏடீ, சேடி; சேறுமிக்க வயல்களையுடைய திருவொற்றியூர்க்கண் உறையும் அழகராகிய இப்பிச்சைத் தேவரது முகத்தைப் பார்த்து, “கங்கை தங்கிய சடையை யுடையவரே, உமது மனவிருப்பம் யாதோ, அதனை எடுத்துரைத்தால் தருவேன்” என்று சொன்னேனாக, பெறற்கு எளிதிற் கிடைக்காத விரிந்த குமுதத்திற் சமைத்த அமுதம் கொணர்ந்து இன்னும் எள்ளத்தனை கொடுப்பாய் என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     அள்ளற் பழனம் - நெல் விளைவுக்கேற்ற சேறு அமைந்த நன்செய் நிலம். “இருஞ்சேற் றகன்வயல்” என்பர் நக்கீரர் (முருகு). அழகின் உருவமாய் விளங்குதலால் “அழகர்” என்று இசைக்கின்றார். முகம் நோக்கினாலன்றி உள்ளக்குறிப்பு உணரப்படாமையால் “முகம் நோக்கி” என மொழிகின்றாள். வெள்ளம்: ஈண்டுக் கங்கை மேற்று. “வெள்ளந் தாழ்விரி சடையாய்” (சதகம்) என்று மணிவாசகர் உரைப்பது காண்க. விரும்புவது இன்னதென்று தெரிவித்தால் கொடுப்பேம் என்றற்கு “விருப்பேது உரைத்தால் தருவல்” என்று வினவுகின்றாள். அலர் குமுதம் நெருப்புக்காகிச் சோறுசமைக்கும் அடுப்புக்குப் பெயராயிற்று. குமுதம் கொண்ட அமுதம், அடுப்பிற் சமைக்கப்பட்ட சோறு என்றும், குமுதமலர் போன்ற வாயிடத்திற் பெறலாகும் அமுதம் என்றும் பொருள்படும். வாயமுதம், வாயிடத்தூறும் நீரும், வாயாற் சொல்லப்படும் இனிய சொல்லுமாம். இன்னும் சிறிது கொடு என்பாராய், “இன்னும் எள்ளத்தனை தா” என்று கேட்கின்றார்.

     இதன்கண், விருப்பு ஏது? உரைத்தால் தருவல் என்றாட்கு, குமுதம் கொண்ட அமுதம் இன்னும் எள்ளத்தனை தா என்று கேட்டவாறாம்.

     (107)