1879.

     விஞ்சு நெறியீ ரொற்றியுளீர்
          வியந்தீர் வியப்பென் னிவணென்றேன்
     கஞ்ச மிரண்டு நமையங்கே
          கண்டு குவிந்த விரிந்திங்கே
     வஞ்ச விருதா மரைமுகையை
          மறைக்கின் றனநின் பால்வியந்தா
     மெஞ்ச லறநா மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூரில் உள்ளவரே, பொய்தீர் ஒழுக்க நெறியீராகிய நீவிர் இங்கு வந்து வியக்கின்றீர்; இவண் வியப்புக்குரியதாவது யாது என்று கேட்டேனாக, அங்கே தாமரையிரண்டும் எம்மைக் கண்டு குவிந்தன; இங்கே அவையிரண்டும் முகையிரண்டனையும் மூடி மறைக்கின்றன; இந்நிகழ்ச்சியை யாம் குறைவின்றிக் கண்டதனால் வியப்புற்றாம் என உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     நெறிகள் பலவற்றிலும் மேம்பட்டது இறைவன் உரைத்த “பொய்தீர் ஒழுக்கநெறி” யாதலின், அதனை “விஞ்சும் நெறி” என விளம்புகின்றார். பலிவேண்டி வந்த பிச்சைத் தேவர், மனை நோக்கியபோது கண்டு கைகுவித்த நங்கை, மனைக்குள் வரவேற்றது கண்டு வியந்து நோக்கினார்; அவ்வியப்பு நங்கையின் நினைவைத் தூண்டினமையின் “வியந்தீர் இவண், வியப்பு என்” என்று கேட்கின்றாள். எம்மை அங்கே கண்டதும் தாமரைபோன்ற உன் கைகள் குவிந்து கும்பிட்டன என்பாராய், “கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த” என்றும், மனைக்குள் வரவேற்றபோது, இங்கே தாமரை மொட்டுப் போன்ற கொங்கை யிரண்டும் மறையுமாறு கைகளைக் கட்டிக் கொண்ட செயல், குவிந்த தாமரை விரிந்து எழுகின்ற முகைகளை மறைப்பது போன்றமையின், வியப்பு நன்கு தோன்றுவதாயிற்று என்பார், “இங்கே விரிந்து இருதாமரை முகையை மறைக்கின்றன; அதனை நின்பால் எஞ்சல் அறக்கண்டு வியந்தாம்” என்று உரைக்கின்றார். அங்கே குவிந்த தாமரை இங்கே விரிந்ததும், எழுகின்ற கொங்கைகளின் வஞ்சச் செயலை உணர்ந்து மறைப்பதும் மிக்க வியப்பைத் தருகின்றன என்றாராயிற்று. கண்டாருள்ளத்தில் காமவேட்கையை எழுப்புதல்பற்றி “வஞ்ச விருதாமரை முகை” என்று சிறப்பிக்கின்றார்.

     இதன்கண், வியந்தீர், வியப்பு, இவண் என் என்று கேட்டாட்கு, அங்கே குவிந்து நின்ற தாமரை இங்கே விரிந்து முகையை மறைகின்றமை வியப்பாயிற்றென விடையிறுத்தவாறு.

     (108)