188.

    இருப்பேன் துயர்வாழ் வினிலெனினும்
        எந்தாய் நினது பதங்காணும்
    விருப்பேன் அயன்மால் முதலோரை
        வேண்டே னருள வேண்டாயோ
    திருப்பே ரொளியே யருட் கடலே
        தெள்ளா ரமுதே திருத்தணிகைப்
    பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே
        புனித ஞானப் போதகமே.

உரை:

     திருத்தணிகை மலையில் எழுந்தருளும் புண்ணிய வடிவாய முருகப் பெருமானே, தூய ஞான இளைய யானையே, திருமிக்க பெரிய ஒளிப் பொருளே, திருவருட் கடலே, தெளிந்த பெறற்கினிய ஞானவமுதமே, துன்பமிக்க வாழ்க்கையில் ஆழ்ந்து கிடப்பேனென்றாலும் எந்தையாகிய நின்னுடைய திருவடியைக் கண்டு மகிழும் விருப்பம் மிக வுடையேனாதலால் பிரமன திருமால் முதலிய தேவதேவர் பதங்களை யான் வேண்டுவதில்லை யென்பது கண்டேனும் நீ திருவருள் பாவிக்க வேண்டுமன்றோ? செய்தருள்க, எ. று.

     திரு - ஞானச் செல்வம்; சிவஞானமாகிய செல்வம் பேரொளி கொண்டு திகழ்வதனால் முருகப் பெருமானைத் திருப் பேரொளியே என்று சிறப்பிக்கின்றார். வற்றாப் பேரருள் உடைமை தோன்ற “அருட் கடல்” எனக் கூறுகின்றார். ஞானாமிர்தம் “தெள்ளாரமுது” எனப்படுகிறது. புண்ணிய வடிவமாதலின், முருகன் திருவுருவைப் “புண்ணியமே” எனப் புகழ்கின்றார். போதகம்-இளமை. யானைக் கன்றையும் போதகம் என்பர். “ஞானமாகிய நன்குணர் ஆனையர்” (குறுந்) என்பர் நாவுக்கரசர். பிறப்பு வயப்பட்ட யான் அதன்கண் பன்முறையும் வீழ்ந்து கிடப்பேனெனினும் பிறப்பறுக்கும் பெருமானாகிய உன்னுடைய திருவடி கண்டு களிக்கும் பேரார்வம் உடையேன் என்பார், “இருப்பேன் துயர் வாழ்வினிலெனினும் எந்தாய் நினது பதங்காணும் விருப்பேன்” என்று கூறுகின்றார். விருப்புடையேன் என்பது விருப்பேன் என வந்தது. இவ்விருப்ப மிகுதியால் பிரமன் திருமால் ஆகியோர் உலகடைந்து இன்புறுவதை வேண்டுகின்றேனில்லை என்பாராய், “அயன்மால் முதலோரை வேண்டேன்” என்றும், எனவே, எனக்கு உனது திருவருளை நல்குவது பொருத்தமன்றோ என்றற்கு “அருள வேண்டாவோ” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், திருமால் பிரமன் முதலாயினாரை வேண்டாமல் உனது திருவடி காணும் விருப்புடைமை கண்டேனும் அருள் புரிக என முறையிட்டவாறாம்.

     (8)