1880.

     அளியா ரொற்றி யுடையாருக்
          கன்ன நிரம்ப விடுமென்றே
     னளியார் குழலாய் பிடியன்ன
          மளித்தாற் போது மாங்கதுநின்
     னொளியார் சிலம்பு சூழ்கமலத்
          துளதாற் கடகஞ் சூழ்கமலத்
     தெளியார்க் கிடுநீ யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூரை யுடைய பிச்சைத் தேவராகிய இவர் அருள்மிக்கவராதலின் இவர்க்கு நிரம்ப அன்னம் இடுமின் என்று சேடியர்க்கு உரைத்தேனாக, வண்டு மொய்க்கும் கூந்தலையுடையவளே, எனக்குப் பிடியன்னம் அளித்தாற் போதும்; அது தானும் நின்னுடைய ஒளி திகழும் சிலம்பணிந்த கமலத்திலுள்ளது; கடகம் அணிந்த கமலத்திலுள்ளதை எளியவர்க் கிடுவாயாக என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     அளி, முன்னது அருள் மேலும், பின்னது வண்டின் மேலும் நிற்பன. குழல் - கூந்தல். தேவர் பலிவேண்டிச் சென்றபோது, நங்கை பூக்களால் தன் கூந்தலை ஒப்பனை செய்து கொண்டிருந்தாளாதலின், சேடியரை நோக்கி “அன்னம் நிரம்ப இடுமின்” என்று பணித்தாள். நிரம்ப இடும் என்றது விருப்புக் குறைந்த கருத்தும், சிறிது கொடுக்க என்ற குறிப்பும் அமைந்திருந்தமையின், பிடியன்னம் அளிப்பது போதும் என்பாராய், “அணியார் குழலாய் பிடியன்னம் அளித்தார் போதும்” என்று கூறுகின்றார், பிடியளவாய அன்னத்தையும் நீ கொணர்ந்து இடுக என்பாராய், நான் வேண்டும் பிடி நின் தாமரை போன்ற கால்நடையில் உளது என்றற்கு “அது நின் ஒளியார் சிலம்பு சூழ் கமலத் துளது” என்றும், எளியார்க்கு இடற்குரிய அன்னம் கடகமணிந்த நின் தாமரை போன்ற கையில் உளது என்பாராய், “கடகம் சூழ் கமலத்துளது” என்றும் கூறினார் என அறிக. சிலம்பு சூழ் கமலம் என்றது காலடியையும், கடகமணிந்த கமலம் கையையும் வெளிப்படுத்தின. அன்னத்துக்கு இடம் கமலமாதலின், இரண்டிற்கும் கமலமே கூறப்பட்டது. பிடியானையின் நடை பெண்களின் நடைக்கு உவமமாவது மரபு.

     இதன்கண், நிரம்ப இடுமின் என்று சேடியரைப் பணித்தாட்கு, பிடியன்னத்தைக் கொணர்ந்து எனக்கிடுக, நிரம்பிய அன்னத்தை எளியார்க்கு இடுக; எனக்கு நீ கொணர்ந்திடுக, எளியார்க்குச் சோறிடுக எனச் சேடியர்க்குப் பணிக்க என்றும் உரைத்தவாறாம்.

     (109)