1881.

     விச்சைப் பெருமா னெனுமொற்றி
          விடங்கப் பெருமா னீர்முன்னம்
     பிச்சைப் பெருமா னின்றுமணப்
          பிள்ளைப் பெருமா னாமென்றே
     னச்சைப் பெறுநீ யம்மணப்பெண்
          ணாகி யிடையி லையங்கொள்
     ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடி.

உரை:

     ஏடீ, சேடி; ஞானமேயான பெருமான் என்னும் திருவொற்றியூர் விடங்கப் பெருமானாகிய நீர், முன்பு பிச்சையேற்கும் பெருமகனாய்த் தோன்றி, இப்போது திருமணக் கோலத்துப் பிள்ளைப் பெருமானா யிருக்கின்றீர் என உவந்து மொழிந்தேனாக, அமைப்பை நன்கு பெற்ற அதற்குரிய மணப் பெண்ணாகி இடையிற் சிறுமையுற்றுக் காதலன்புடைய பெரும் பெண்ணாயினாய் என்று உரைக்கின்றார்; இது தான் என்னே. எ.று.

      விச்சை; ஈண்டு ஞானம் குறித்தது. விடங்காப் பெருமான் - அழகனாகிய பெருமான்; வடமொழியில் சுயம்பு மூர்த்தி என்பர். பிச்சைப் பெருமான் - பிட்சாடன மூர்த்தி; பலியேற்கும் பெருமான்; பிச்சைத் தேவர். மணப்பிள்ளைப் பெருமான் - மணக்கோலம் விளங்கும் இளங்கோமகன். 'முன்னம் பிச்சைப் பெருமானாகத் தோன்றிய நீவிர் இப்போது மணமகன் கோலத்துடன் பொலிகின்றீர்' என்று கேட்டவட்கு திருமணத்தால் பெறலாகும் இன்ப நுகர்ச்சிமேல் விருப்பம் மிக்கிருப்பதுணர்ந்துகொண்ட தேவர், மணம் செய்து கோடற்கு ஏற்ற அமைதி முற்றும் குறைவறப் பெற்றுள்ளாய் என்பாராய், “அச்சைப் பெறும் நீ” எனக் குறித்துரைத்து, மணப்பெண்ணாய் இடை சிறுத்து காதல் பெருத்து மங்கைப் பருவப் பெண்மை மிக்குள்ளாய் என்று கூறலுற்று, “நீ அம்மணப் பெண்ணாகி இடையில் ஐயங்கொள் இச்சைப் பெரும் பெண்ணாயினாய்” என உரைக்கின்றார். அச்சு - அமைப்பு. அம்மணப்பெண் - அம்மணப்பிள்ளைக்கேற்ற மணப்பெண். இடையில் ஐயங்கொள், இச்சை - இடை உண்டோ இல்லையோ என்று ஐயம் கொள்ளுமாறு சிறுத்து பெருகும் இச்சை (காதலுணர்வு). ஐயங்கொள் இச்சை - ஐயம் கொள்ளப் பெருகும் இச்சை. காமம் கனிந்த நிலையில இடை சிறுத்தலும் கொங்கை பெருத்தலும் இயல்பாதலின், “இடையில் ஐயங்கொள் இச்சைப் பெரும் பெண்” என எடுத்து மொழிகின்றார். “சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே” (குறுந். 18) என்று சான்றோர் உரைப்பது காண்க.

     இதன்கண், நீர் இன்று மணப்பிள்ளைப் பெருமானாம் என்றாட்கு, நீ அம் மணப்பெண்ணாகி இச்சைப் பெரும் பெண்ணாம் என்று விடை கூறியவாறாம்.

     (110)