1882. படையம் புயத்தோன் புகழொற்றிப்
பதியீ ரரவப் பணிசுமந்தீர்
புடையம் புயத்தி லென்றேன்செம்
பொன்னே கொடையம் புயத்தினுநன்
னடையம் புயத்துஞ் சுமந்தனைநீ
நானா வரவப் பணிமற்று
மிடையம் பகத்து மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; படைத்தல் தொழிலை யுடையவனும் தாமரை மலரில் இருப்பவனுமான பிரமதேவன் புகழும் திருவொற்றியூரைப் பதியாக வுடையவரே, நீர் பருத்த தோளின் கண் பாம்பை அணியாகச் சுமக்கின்றீரே என்று சொன்னேனாக, செம்பொன் போலும் நிறமுடைய திருமகளைப் போன்றவளே, கொடைக்குரிய கையம்புயத்தினும், நடைக்குரிய அடியம்புயத்தினும் பல்வகை அரவப்பணிகளைச் சுமந்துள்ளாயே, அதுவேயன்றி இடைக்கண் அல்குலாகிய அம்புயத்தினும் பாம்பணி அணிந்திருக்கின்றாயே, அதனை நினைந்திலை போலும் என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
படை - படைத்தற்றொழிலைக் குறிக்கும முதனிலைத் தொழிற் பெயர். பதி - வாய்ந்த இடம். அரவப்பணி - பாம்பாபரணம். ஒலியைச் செய்யும் அணிகள் என்றுமாம். புடையாம் புயம் - பருத்துத் திரண்ட அழகிய தோள். பலியிடும் நங்கை, தோளில் பாம்பை ஆபரணமாக அணிந்திருக்கின்றீரே ஏன் என்று கேட்கின்றாள். அணிந்திருக்கின்றீர் என்னாமல் சுமந்தீர் என்றது, இகழ்ந்து பேசும் குறிப்பு. பொன் - திருமகள். செம் பொன்னே என்றது, உச்சி முதல் கால் விரல் வரை செம்பொன்னாலாகிய அணிகளை விரும்பியணிந்து பொன்மயமாக இருப்பவளே என்று பொருள்படுவது காண்க. கொடை, கொடுத்தற்குரிய கைம்மேலும்; நடை, நடைக்குரிய அடிமேலும் நிற்றலின்; இரண்டும் தாமரை போறலின், கைத்தாமரை, அடித்தாமரைகளை இவ்வாறு இகழ்ந்த குறிப்புத் தோன்றக் “கொடையம்புயம், நடையம்புயம்” என்று குறிக்கின்றார். கையில் ஒலிக்கின்ற வளையும், காலின்கண் ஓசை செய்யும் சிலம்பும் அணிந்திருப்பதுபற்றி, இரண்டு அம்புயத்தினும் “நானா அரவப்பணி சுமந்தனை” என்று கூறுகின்றார். கையில் பாம்பு சுற்றியது போலும் வேலைப்பாடமைந்த நாககங்கணம் அணியப்படுதலுண்மையின், அரவப்பணி அதனைக் குறிப்பதாகக் கோடலுமாம். அல்குலையும் தாமரை யென்றல் வழக்கு. கச்சியப்ப முனிவர்,
“திருமுகம் கமலம் இணைவிழி கமலம்
செய்யவாய் கமலம் நித்திலம் தாழ்
வருமுலை கமலம் இணைக்கரம் கமலம்
வலம்புரி யுந்தி பொற்கமலம்
பெருகிய அல்குல்மணித் தடம்கமலம்
பிடி நடைத் தாள்களும் கமலம்
உருவவட் கவ்வா றாதலி னன்றே
உயர்ந்தது பூவினுட் கமலம்” (தணிகை)
என்பது காண்க. அல்குலிடத்தே பாம்பின் படம் போலும் மேகலை யென்ற மணிக்கோவை அணியப்படுதலால், “அரவப்பணி இடையம் புயத்தும் சுமந்தனை” என்று இசைக்கின்றார். இடை, ஈண்டு அல்குலைக் குறிக்கின்றது. இடைக்கும் முழந்தாளுக்கும் இடையிலுள்ள பகுதி, அல்குல் எனப்படும். இருபாலார்க்கும் உண்மை நோக்காது, இடைக் காலத்தார் மகளிர் உறுப்பாகக் கொண்டு மருண்டனர்.
இதன்கண் அரவப்பணி தோளில் சுமந்தீரே என்றாட்கு, நீ கையினும் காலினும் இடையினும் அணிந்து சுமக்கின்றாயே என உரையாடியவாறாம். (111)
|