1886.

     கோடா வொற்றி யுடையீர்நுங்
          குலந்தான் யாதோ கூறமென்றேன்
     வீடார் பிரம குலந்தேவர்
          வேந்தர் குலநல் வினைவசியப்
     பாடார் குலமோர் சக்கரத்தான்
          பள்ளிக் குலமெல் லாமுடையே
     மேடார் குழலா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வளமை மாறாத திருவொற்றியூரை யுடையவரே, உமது குலம் யாது கூறுமின் என்று கேட்டேனாக, மலர் சூடிய கூந்தலையுடையவளே, வீடடைதற்குரிய அறிவையுடைய பிரமகுலம், தேவர் குலம், அரசர் குலம், நற்றொழில் செய்யும் வைசியரது பெருமையான குலம், ஒப்பில்லாத சக்கரத்தையுடைய வேட்கோவர் குலம், பள்ளிக் குலம் ஆகிய எல்லாக் குலமும் எனக்குரியது என்று கூறுகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     கோடுதல் - வளைதல், மாறுதல். வளம் பொருந்திய நிலைமை கெடாது நிலைபெறுவது கருதிக் “கோடா ஒற்றி” என்று கூறுகின்றாள். இந் நாளையோர் குறிக்கும் சாதியை இங்கே குலம் என்று குறிக்கின்றார். பிச்சைத் தேவரை நோக்கி, உமது சாதி யாது என்று கேட்பாளாய், “நும் குலம் தான் யாதோ கூறும்” என்று பலியிட வந்த நங்கை வினவுகின்றாள். குலம் என்று சொல் சாதியொடு கோயிலையும் குறிப்பதாதலால், அதனைக் கருதிக் கொண்டு எமது குலம், பிரம குலம், தேவர் (வேந்தர்) குலம், நல்வினை வசியர் குலம், சக்கரத்தான் பள்ளிக்குலம், எல்லாம் உடையேம்” என்று உரைக்கின்றார். பிரம குலம் - பிரமன் பூசித்த கோயில், பிராமண சாதி. தேவர் குலம் - தேவர்கள் வழிபட்ட கோயில், தேவர் என்பார் மரபு, வேந்தர் குலம் - வேந்தர்கள் கட்டி வழிபட்ட கோயில், வேந்தரினத்து இந்திரன் வழிபட்டெடுத்த கோயில், அரசர் மரபு. நல்வினை - வாணிகம், பிறவும் தமபோற் செயும் விற்பனை நலம் பெற்றது பற்றி, வாணிகம், “நல்வினை” எனப்பட்டது. வணிகரை வடநூலார் வைசியர் என்பர்; அது வசியர் என வந்தது. வணிகரைப் பண்டைச் சான்றோர் அரசர்க்கு அடுத்த நிலையில் வைத்துப் பெருமை செய்தனராதலால், “வணிகரினத்தை வசியப் பாடார் குலம்” என்று பாடுகின்றார். பாடு - பெருமை. சக்கரத்தான்பள்ளி - சக்கரமேந்திய திருமால் பள்ளி கொண்டிருக்கும் கோயில்; சக்கரப் பள்ளி என்றே ஒரு கோயில் உண்டு. அதனை வள்ளற் பெருமான், “கள்ளமிலம் சக்கரப் பள்ளிதனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் சக்கரப்பள்ளி” (விண். கலி) என்பர். “தண் வயல் புடையணி சக்கரப்பள்ளி” என்று ஞானசம்பந்தர் பாராட்டுவர். சக்கரத்தான் என்பது கடசக்கரன் எனப்படும் குயவனைக் குறித்தலால், வேட்கோவரினத்துக் குயப்பள்ளி மரபைக் குறிப்பை குறிப்பதாக வுரைப்பதும் உண்டு. பள்ளி என்றே ஒரு மரபுண்டென்பர். ஏடு - பூவின் இதழ்; இதழால் தொடுத்த மாலையுமாம்.

     இதன்கண், நுமது குலம் யாது என்று வினாவினாட்குப் பிரமகுலம் முதல் பள்ளிக்குலம் ஈறாகவுள்ள குலமனைத்தும் எமது என்று கூறியவாறாம்.

     (115)