1887. நலமா மொற்றி யுடையீர்நீர்
நல்ல வழக ரானாலுங்
குலமே துமக்கு மாலையிடக்
கூடா தென்றே னின்குலம்போ
லுலகோ துறுநங் குலமொன்றோ
வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
கிலகா நின்ற தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; நன்மை மிக்க திருவொற்றியூரை யுடையவராகிய நீவிர், நல்ல அழகுடையராயினும், உமக்குக் குலமில்லையாதலால் உமக்கு மாலையிடலாகாதே என்றேனாக, உன் குலம் போல உலகவர் உயர்த்துக் கூறும் எமது குலம் ஒன்றன்று, இவ்வுலகில் ஓராயிரத்தெட்டு உயர்வுடைய குலங்கள் விளங்குகின்றன என்று இயம்புகின்றார்; இது தான் என்னே. எ.று.
ஊர்க்குரிய நலங்கள் பலவும் பொருந்தியிருப்பது தோன்ற, “நலமாம் ஒற்றி” என நவில்கின்றார். காண்கின்ற கண்ணும் மனமும் காட்சியால் மகிழ்வும், கருத்தால் தெளிவும் பெறுவது கொண்டு, “நல்ல அழகர்” எனவும், ஆயினும் குலமுடைமையாற் சிறப்புறாமையால் உமக்கு மாலையிடல் பொருந்தாதாகிறது என்பாளாய், “ஆனாலும் குலம் ஏது உமக்கு; மாலையிடக் கூடாது” எனவும் உரைக்கின்றாள். குலமென்பதற்குச் சாதியென்ற பொருளை மனத்திற்கொண்டு உரையாடிய அவளுக்கு அக்குலமென்ற சொல் கோயிலைக் குறிக்கின்றதை எண்ணத்திற் கொண்டு, “நின்குலம் போல் நம்குலம் ஒன்றோ, ஓராயிரத்தெட்டு உயர்குலம் இங்கு இலகா நின்றது” என இயம்புகின்றார். நின் குலம் - நீ உறையும் கோயில், தலைமை சான்ற இல்லம். நின் இல்லமும் கோயிலாயினும், உலகத்தார் எனது இல்லத்தையே கோயிலெனவும் குலமெனவும் உயர்வு தோன்றக் கூறுவர் என்பாராய், “உலகு ஓதுறும் நம் குலம்” என வுரைப்பர். இத்தகைய கோயிலாகிய குலம் எமக்கு ஒன்றேயுளது என எண்ணாதே, ஓராயிரத் தெட்டு உள்ளன என்றற்கு, “நம்குலம் ஒன்றோ ஓர் ஆயிரத் தெட்டு” என்றும், அவையனைத்தையும் வான் தொட நிவந்த உயர்வுடையனவாம் என்பாராய், “ஓராயிரத் தெட்டு உயர்குலம் இங்கு இலகா நின்ற” என்றும் இயம்புகின்றார். திருமால் கோயில் நூற்றெட்டெனவும், சிவன் கோயில் ஆயிரத் தெட்டெனவும் கூறுவது வழக்கு. நின்ற: அன் பெறாத அகற வீற்றுப் பலவறி சொல்.
இதன்கண், நீர் நல்ல அழகராயினும், உமக்குக் குலமில்லையாதலால் மாலையிடலாகாது என்றாட்கு, நின் குலம் போல் நமக்கு உலகு ஓதுறும் கோயில் ஒன்றல்ல ஓராயிரத் தெட்டுள்ளன காண்க என்று கூறினாராம். (116)
|