1889. தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர்
திகழுந் தகரக் காற்குலத்தைப்
பூமா னிலத்தில் விழைந்துற்றீர்
புதுமை யிஃதும் புகழென்றே
னாமா குலத்தி லரைக்குலத்துள்
ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண்
டேமாந் தனைநீ யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; தேமா மரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, பூதேவி தாங்கும் நிலவுலகில் விளங்குகின்ற தகரக் காற்குலத்தை இடமாக விரும்பி எழுந்தருளியிருக்கின்றீர்; புதுமைமிக்க இது நிலத்துக்கேயன்றி உமக்கும் புகழ் பயந்துள்ளது என்று சொன்னேனாக, ஆமா குலம் என்பதில் அரைக் குலத்தை உள்ளத்திலும், மற்றை அரைக்குலம் என்பதைப் புறத்தே சொல்லிலும் கொண்டு நீ மயங்கினாய் என உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
தேமா - இனிய பழம் நல்கும் மாமரம். புளிமா என வேறே யுண்மையின் தேமாவை விதந் தோதினார். தகரக் காற்குலம் - தகரமரத்தின் கால் நிறுத்திக் கட்டப்பட்ட கோயில்; இத்தகரம் நறுமணம் கமழ்வது. சந்தன மரத்தின் வகைகளில் ஒன்று என்றும், தில்லையம்பலத்தில் இதன் பலகையே சுற்றிலும் சுவராக வைக்கப்பட்டுள்ளது என்றும், அது பற்றியே யதற்குத் தகராலயம் எனப் பெயருண்டென்றும் கூறுவர். பழங்காலத்தில் கோயில்கள் யாவும் செங்கல்லும் சுண்ணாம்பும் மரமும் கொண்டே கட்டப்பட்டன; இடைக்காலப் பல்லவத் தமிழ் வேந்தர் காலத்தில்தான் கருங்கல்லாற் கட்டப்பட்டன என வரலாற்றறிஞர் கூறுவர். பூமான் நிலம் - பூமாது தாங்கும் நிலவுலகம். நிலத்தில் தகரக் காற்குலத்தை விரும்பி எழுந்தருளியுள்ளீர். ஞானாகாயப் பரவெளியில் அகளமாய் இருக்கின்ற நீவிர் நிலத்தில் தில்லையில் தகரக்காற் கோயிலில் சகளவுருவில் எழுந்தருளியது புதுமையாவதே யன்றி நிலவுலகுக்கும் உமக்கும் இதனால் புகழே யுண்டாயிற்று என்று பலியிட வந்த நங்கை சொன்னாள். அவட்கு தகரக்காற் குலம் என்றதைத் தகரின் காற்குலம் என்று பொருள் கொண்டு, ஆம், தகர் ஆமா வினம் என்பாராய், குலத்தில், ஆமா என்பதில் அரையாகிய ஆகுலத்தை உள்ளத்தில் கொண்டும், மற்ற அரையாகிய மாகுலத்தை உனக்கு உரியதென்றுரைத்துக் கொண்டும் மயங்கினாய் என்று சொல்லுகின்றார். தகர் - ஆடு, ஆமா - பசு; காட்டுப் பசுவுமாம். வேள்வி செய்வோர் யாகப் பசுவெனப் பசுவையும் தகரையும் ஓரினமாகவே கொள்வர். தேவரது தோற்றம் கண்டு கருத்திழந்து காமவேட்கையால் உள்ளத்தே கொண்டிருந்த வருத்தத்தை “ஆகுலத்தை உள் அணைந்” தென்றார். மாகுலம் - உயர்குலம். உள்ளத்து ஆகுலமும், புறத்தே குலவுயர்வு பேசும் செருக்கும் அறிவை மயக்கினமை கண்டு, “ஏமாந்தனை” என்று முடிக்கின்றார். (118)
|