189. போதானந்த வருட் கனியே
புகலற்கரிய பொருளேயென்
னாதா தணிகை மலையரசே
நல்லோர் புகழும் நாயகனே
ஓதா தவமே வருந் துயரால்
உழன்றே பிணியி லுலைகின்றேன்
ஏதாம் உனதின் னருள் ஈயா
திருந்தா லந்தோ எளியேற்கே.
உரை: தணிகை மலையில் மேவுகின்ற அரசனே, என்னுடைய நாதனே, நல்லவர் புகழ்கின்ற தலைவனே, ஞானம் நல்கும் இன்ப அருளாகிய கனியே, எடுத்துரைத்தற்கரிய மெய்ப் பொருளாகியவனே, உன்னை யுணர்த்தும் ஞான நூல்களைக் கல்லாமல் வீணனாய் மிக்கு வருகின்ற துன்பத்தால் வருந்திப் பல்வகைப் பிணியுற்றுத் துயர் உறுகின்றேன்; உனது இனிய திருவருளை எளியனாகிய எனக்கு ஈயாவிடில் என் நிலைமை யாதாகும்? எ. று.
அல்லாதார் புகழ்வது பொருள்சேர் புகழாகாதாகலின், “நல்லோர் புகழும் நாயகனே” என நவில்கின்றார். போதம்-ஞானம். ஞானத்தாற் பெறப்படும் இன்பம் திருவருளால் உளதாவது பற்றிப் “போதனாந்த அருட் கனியே” எனவும், சிந்தையும் மொழியும் செல்லா நிலைமை யதாகலின், மெய்ப் பொருளைப் “புகலற்கரிய பொருளே” எனவும் புகல்கின்றார். உண்மை ஞான முணர்த்தும் உயர் நூல்களை யோதாமல் வீணாள் கழித்தமை யுணர்த்தற்கு “ஓதாது அவமே” எனவும், அதனாற் பெற்ற பயன் நோயும் துயரமுமே என்பாராய், “வருந்துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்” எனவும் உரைக்கின்றார். உனது திருவருள் உண்மை ஞானத்தையும் அயரா இன்பத்தையும் நல்குவ தென்பார், “உனது இன்னருள்” என்றும், அதனை எளியேன் என்று புறக்கணித்து அருளாயாயின், மாளாத் துன்பத்துக் காளாய்க் கெடுவேன் என்பாராய், “இன்னருள் ஈயாதிருந்தால் எளியேற்கு நிலைமை ஏதாம்” என்றும் இசைக்கின்றார். அந்தோ, இரக்கக் குறிப்பு.
இதனால், திருவருளால் உண்டாகும் நலமும், அதனை ஈயாவிடத்து உண்டாகும் கேடும் கூறியவாறாம். (9)
|