1891. பங்கே ருகப்பூம் பணையொற்றிப்
பதியீர் நடுவம் பரமென்னு
மங்கே யாட்டுக் காலெடுத்தீ
ரழகென் றேனவ் வம்பரமே
லிங்கே யாட்டுத் தோலெடுத்தா
யாமொன் றிரண்டு நீயென்றா
லெங்கே நின்சொல் லென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடி.
உரை: ஏடீ, சேடி; தாமரைகள் மலர்ந்திருக்கும் நீர்வள வயல்களையுடைய திருவொற்றியூரையுடைய தேவரே, பொது எனப்படும் சிதம்பரமாகிய அவ்விடத்தே கூத்தாடற்குத் திருவடியைத் தூக்கினீர்; அது மிகவும் அழகுடைத்தாகும் என்று இயம்பினேனாக, அவ்வம்பரத்துக்கு மேலாக இவ்விடத்தே நீ அவ்வாட்டுத்தோலை எடுத்தாய்; மேலும் அதனிடத்தும் யாம் ஒன்று எடுத்தோம்; நீ இரண்டு எடுத்தாய்; எங்கே நின் சொல் பொருத்தமானது என்று உரைக்கின்றார், இதுதான் என்னே. எ.று.
பங்கேருகம் - தாமரை. பணை - நீர்வளம் கொண்ட நன்செய் வயல்கள். நடு - பொது; நடு அம்பரம் என்று சிறப்பித்தமையால் சிதம்பரம் ஆயிற்று. தில்லையம்பலத்துக்குப் பொதுவென்பதே ஒரு பெயராதலால், சிதம்பரம் என்னாது நடுவம்பரம் என்று கூறுகின்றாள். ஆட்டுக்கால் - ஆட்டத்துக்குரிய கால். கூத்தப் பெருமானுடைய தூக்கிய திருவடியை “எடுத்த பாதம்” என்பது வழக்கமாதலின். “ஆட்டுக்கால் எடுத்தீர்” என உரைக்கின்றாள். அங்கே சிதம்பரத்தில் அம்பலத்தே ஆடற்குத் திருவடியை எடுத்தீர்; அது அழகிதாம் என்று மொழிந்தாளாக, எடுத்தல் என்பது ஒப்புப் பொருளினும் வருவது கொண்டு, “நீ இங்கே ஆட்டுத்தோல் எடுத்தாய்” எனத் தேவர் மொழிகின்றார். ஆட்டுத்தோல் எடுத்தாய் என்பதில் தோல் யானைக்குப் பெயராதலால், ஆட்டுத்தோல், அசைகிறை யானை என்று பொருள் தருவதாயிற்று. யானையின் இரு கொம்புபோல இரண்டு முலைகளையுடையாய் என்று குறிப்புத் தோன்ற ஆட்டுத்தோலில் நீ இரண்டு எடுத்துக் கொண்டாய்; யாம் அதன் தோல் ஒன்றையே போர்வையாகக் கொண்டோம் என்றற்கு, “யாம் ஒன்று இரண்டு நீ” என்று சொல்லுகின்றார். யாம் ஆட்டுக்கால் ஒன்று எடுத்தோம்; நீ ஆட்டுத்தோல் இரண்டு எடுத்தாய் என்றதுமாம்.
இதன்கண், நீர் ஆட்டுக்கால் எடுத்தீர் அழகாம் என்றாட்கு, நீ ஆட்டுத்தோல் எடுத்தாய்; யாம் ஒன்று எடுத்தோம், நீ இரண்டு எடுத்தாய்; நின் சொற்குப் பொருத்தம் எங்கேயுளது என்றாராம். (120)
|