1892.

     மாணப் புகழ்சே ரொற்றியுளீர்
          மன்றார் தகர வித்தைதனைக்
     காணற் கினிநான் செயலென்னே
          கருதி யுரைத்தல் வேண்டுமென்றேன்
     வேணச் சுறுமெல் லியலேயாம்
          விளம்பு மொழியவ் வித்தையுனக்
     கேணப் புகலு மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; மிக்க புகழ் பொருந்திய திருவொற்றியூரில் உள்ளவரே; தில்லையம்பலத்தின் பொருளாக விளங்கும் தகரவித்தையை யான் அறிதற்கு இப்பொழுது செயலாவது யாதாம்? அதனை நினைந்து எனக்கு உரைத்தல் வேண்டுமென்று கேட்டுக் கொண்டேனாக, மதவேளும் ஆசைகொளும் மெல்லிய இயல்புடைய நங்கையே, யாம் முன்பே உரைத்துள்ள சிவாகமங்கள் அத் தகரவித்தையை உனக்கு உறுதியுண்டாகச் சொல்லும் என வுரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

      மாண்புகழ் என்பது மாணப் புகழ் என வந்தது. புகழ் மாணச் சேர்ந்த ஒற்றியூர் என இயைப்பினும் அமையும். மன்றார் தகரவித்தை, தில்லைச் சிற்றம்பலத்தின் மறைபொருள் (சிதம்பர ரகசியம்). தில்லையில் கூத்தப் பெருமான் காட்சி தந்தருளும் பொன்மன்றம், தகரக்கால் நிறுத்தி இடையிற் சந்தனப் பலகைகளைச் சுவர்போல் அடைத்துள்ளமைபற்றித் 'தகராலயம்' என்று கூறப்படும். தகரத்தை மக்கள் உடம்புக்குப் பெயராக்கி உடம்பையும் தகராலயம் எனவும், அதன் உள்வெளியைத் தகராகாசம் எனவும் சைவச் சான்றோர் கூறுவராயினர். சிற்றம்பலம் சிதம்பரமாகியபோது, தகரமன்று தகராலயம், தகராகாசம் என்றும் மாறியதென வரலாறு கூறுகிறது. புறத்தே தில்லைச் சிற்றம்பலமாகிய சிதாகாசப் பெருவெளியில் திருக்கூத்து இயற்றும் பெருமானை, உள்ளமாகிய தகராகாசத்தில் கண்டு திருவைந்தெழுத்தால் அருச்சித்து, விதிப்படி உபசரித்து, “சூரியனை யணையும் சாயாக்கிரகம்போலச் சிவன் தன்னை யணைய ஆன்மா சிவதரிசனானந்தம் பெறும்; சிவாகமம் உபதேசிக்கும் தகரவித்தை இதுவாம்”. வேதத்துக்குப் பஞ்சாக்கினி வித்தைபோலச் சிவாகமத்துகுத் தகரவித்தை அமைந்துளதெனச் சித்தாந்த ஆசிரியர் தவத்திரு வாலையானந்த சுவாமிகள் உரைப்பர். கண், காது முதலிய அறிகருவிகளாலும் மனமுதலிய கரணங்களாலும் அறிவதை இந்திரியக் காட்சி, மானதக் காட்சியென வழங்குவது பற்றி, தகர வித்தையை அறியும் திறத்தையும் காட்சியில் வைத்து, “தகர வித்தைதனைக் காணற்கு நான் செயல் என்” என்று கேட்கின்றாள். மேலும், இத் தகரவித்தை தில்லை சிற்றம்பலத்துக்கே உரியதென்பது இனிது விளங்கவே, “மன்றார் தகரவித்தை” என்று சிறப்பிக்கப்படுகிறது. சிவாகமங்கள் கூறும் அந்தரியாகம் தில்லையம்பதிக்கண் நிகழும் போது தகரவித்தையாம். தில்லையம்பலம் தகராலயமாதலால், தகராலயக் கிரியா கிரமம் தகரவித்தை யாயிற் றென்க. வேள் எனப் பொதுப்பட மொழிதலால் மன்மதவேள் கொள்ளப்பட்டது. நச்சுறும் என்ற பெயரெச்சம். மெல்லியல் என்ற தொகைச் சொல்லாற் குறிக்கப்படும் பெண்ணுருவை விசேடிக்கிறது. சிவாகமங்கள் சிவனால் அருளப் பட்டவையாதலால், அவற்றை “யாம் விளம்பும் மொழி” என்று கூறுகின்றார். வேதங்களும் சிவன் மொழிந்தனவே யெனினும், அவற்றால் தெளியப்படாமல், சிவாகமங்களால் தெளியப்பட்டு வழங்கி வருவதுபற்றி “யாம் விளம்பும் மொழி” எனவுரைத்தார். தில்லைப் பெருங்கோயில் மகுடாகம நெறி கொண்டது. தில்லைக்கோயில் அந்தணர்கள் ஐரோப்பியர் காலத்தே வைதிகப் பிராமணீயத்தை மேற்கொண்டனர் என்பர். சிவாகமங்கள் குறிக்கும் அந்தரியாகம், தில்லைச் சைவர்கட்குத் தகரவித்தையாம்; தில்லையம்பலம் தகராலயமாதலால், அங்கு நிகழும் அந்தரி யாகம் தகரவித்தையாயிற்றென அறிக. “சிவாகமங்கள் உனக்கு ஏணப் புகலும்” என்பதனால், சிவாகமப் பயிற்சி ஆண் பெண் இரு பாலர்க்கும் பொதுவாதல் தெளியப்படும். வேதவாதிகளான வைதிகர் பெண்களுக்கு வைதிக ஞானம் பெற வுரிமையில்லை என்பர். தடை விடை வாயிலாக கேட்போர் உள்ளம் கொள்ளும் வகையில் பொருள்களை வற்புறுத்துவது சிவாகமங்களின் முறையாதலால், “ஏணப் புகலும்” என விதந்துரைக்கின்றார்.

     இதன்கண், மன்றார் தகர வித்தைதனை நான் அறிதற்குச் செயற்பாலது உரைத்தல் வேண்டும் என்றாட்கு, “யாம் விளம்பும் மொழி அவ் வித்தைகளை உனக்கு ஏணப் புகலும்” என இயம்பியவாறாம்.

     (121)