1894.

     ஆட்டுத் தலைவர் நீரொற்றி
          யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
     ராட்டுத் தலைதந் தீரென்றே
          னன்றா லறவோ ரறம்புகல
     வாட்டுத் தலைமுன் கொண்டதனா
          லஃதே பின்ன ரளித்தாமென்
     றீட்டுத் தரமீந் தருள்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூரின்கண் உள்ள அழகிய தேவரே, நீவிர், மன்றின்கண் ஆடப்பெறும் கூத்துக்குத் தலைவர்; இவ்வாறு ஆட்டுத் தலைவராதலால் சிறுவிதி எனப்படும் தக்கனுக்கு ஓர் ஆட்டுத் தலை தந்தீர் என்று சொன்னேனாக, அன்று ஆல நீழற்கண் இருந்து நால்வர்க்கு அறமுரைத்தற்காகப் பேசாமவுனிபாய் ஆட்டுத் தலை கொண்டதனால், அதனையே பின்னரும் தந்தோம் என்று நேர்விடை தந்தருளுகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     ஆட்டுத் தலைவர் - கூத்துக்குத் தலைவர். ஆட்டு - கூத்து. கொட்டாட்டுப் பாட்டு என்பது வழக்கு. ஆட்டும், பாட்டும் அம்மீறு பெற்று ஆட்டம் பாட்டம் என வழங்குதலுமுண்டு. அதனால் சிவனை, ஆடவல்லான், ஆடலரசு என்று இடைக்காலச் சான்றோர் வழங்கினர். பிற்காலத்தே அப்பெயர் “நடராசர்” என வடமொழியில் மாறிற்று. இந்நாளில் வடமொழிப் பெயர் பெருவழக்கிற்றாகவே, பழம்பெயர்கள் மறைந்தன. பிரமதேவனுக்கு 'விதி' என்று பெயருண்டாதலால், அவன் மகனான தக்கனுக்குச் சிறுவிதி எனப் பெயர் எய்துவதாயிற்று. சிவனை விலக்கிப் பழித்துச் செய்த யாகத்தை அழித்தற்குண்டான போரில் அவன் தலையிழந்தானாக, மீள உயிர் பெற்று உண்மையறிவுடன் விளங்கும் பேறுபெற்ற காலை, ஆட்டின் தலை கொடுக்கப்பட்ட செய்தி கருதி, “சிறுவிதிக்கு ஓர் ஆட்டின் தலை தந்தீர்” என்று உரைக்கின்றாள். “வேள்விக் குண்டியாம் பசுவுள் வீந்த மைத்தலைக் கண்டு சேர்த்தி எழுகென்றான்” (யாகசங். 163) சிவன் எனக் கந்தபுராணம் கூறுவது காணக். ஆல நீழற்கீழிருந்து அறமுரைத்தபோது வாயால் உரையாடாது கண்ணாலும் கையாலும், பார்வை முத்திரைகளால் பொருளுண்மை யுணர்த்தியபோது கேட்கும் வினாக்களைத் தலையசைத்து ஊக்கினமை தோன்ற, “அன்று ஆல் அறவோர் அறம்புகல ஆட்டுத் தலைமுன் கொண்டதனால்” என்றும், யாக சங்காரத்தில் பிரமன் வேண்டுகோட்கிசைந்து தக்கனும் உய்தி பெறல் வேண்டி ஆட்டின் தலை தந்து தன் சேவடி தொழச் செய்த வரலாறு காட்டற்கு, “அஃதே பின்னர் அளித்தாம்” என்றும் கூறுகின்றார். ஆட்டுத்தலை என்ற சொற்றொடரையே நேரில் விடைக்கு ஈடாக உரைக்கின்றமை புலப்பட, “ஈட்டுத்தரம் ஈத்தருளுகின்றார்” என நங்கை நவில்கின்றார்.

     இதன்கண், ஆட்டுத் தலைவராதலால் சிறுவிதிக்கு ஆட்டுத்தலை தந்தீர் என்றாட்கு, அன்று அறமுரைத்த காலத்தே முனிவர் பொருட்டு ஆட்டுத்தலை கொண்டோமாதலால், சிறுவிதி உய்தி பெறற் பொருட்டு அந்த 'ஆட்டுத்தலை' தந்து அளிப்பேமாயினேம் என்றார் என்பதாம்.

     (123)