1895.

     ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா
          ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
     கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க்
          குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
     பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார்
          புரத்தே மதியந் தேய்கின்ற
     தெற்றைத் தினத்து மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஒற்றியூரிலுள்ள பிச்சைத் தேவரே, உம்மை மனத்தே விரும்புகின்றவருடைய ஊரில் வியப்புத்தரும் செயல் ஒன்று உளது; இரவு காலத்தில் வெற்றியுடைய தாமரை மலர, குளத்தின் கீழ்க் குமுத மலர் குவிந்துளது என்றேனாக, குன்றுபோலும் கொங்கையையுடைய உம்மை விரும்பினவர் ஊரில், எந்நாளிலும் மதி தேய்ந்தவண்ணம் உளதே என்று சொல்லுகிறார்; இதுதான் என்னே. எ.று.

     “உமைவிழைந்தார் ஊர்” என்றது, உம்பால் அன்பு செய்யும் சிவ ஞானச் செல்வர்கள் வாழும் ஊர்களைக் குறிக்கிறது. வியப்பு என்றது பகலில் விரியும் தாமரை இரவில் மலர்தலும், இரவில் விரியும் குமுதம் பகலில் குவிதலுமாம். கீழ்க்குளம் என்பதைக் குளக்கீழ் என இயைத்துக் கொள்க. குளத்தைக் கமலத்துகும் ஏற்றுக. கமலம் - தாமரை. குமுதம் - அல்லி. இரவில் என்பதைக் காலத்துக் காக்காது இரத்தற்றொழிற் காக்கி, இரப்பார் இரக்குமிடத்து ஏற்கும் கையாகிய தாமரை மலர்கிறது; ஈபவர் வாயாகிய குமுதம் குவிந்து குறுநகை செய்கிறது; இது வியப்பன்றோ என்று பலியிடவந்த நங்கை சொன்னாளாம். விழைந்தாரூரில் என்பதை, விழைந்த ஆரூரில் என்று கொண்டு, திருவாரூரில் உம்பால் அன்பு செய்த நம்பியாரூரர் பொருட்டு இரவில் பரவையார் மனைக்குத் தூது நடந்த போது, உமது திருவடித் தாமரை விரிந்தது; பரவையாருடைய குமுதம் போன்ற வாய் ஊடலாற் குவிந்தது என்று நங்கை வினவியதாகக் கூறலும் ஒன்று. அவட்கு விடை கூறலுற்ற தேவர் உம்மை விழைந்தார் ஊரிலும் இயற்கைக்கு மாறாயது நிகழ்ந்து வியப்பை விளைவிக்கிறது என்பாராய், 'நுமை விழைந்தார் புறத்தே எற்றைத் தினத்தும் மதியம் தேய்கிறது' என உரைக்கின்றார். விழைந்தார் புரம் - விரும்பினவர் ஊர். மதி, அம்முச் சாரியை பெற்று மதியம் என வந்தது; அறிவு என்பதே அதன் பொருள். பொற்றை - குன்று. குன்று போன்ற கொங்கையை யுடையவளே என்றும், குன்றுபோலும் செல்வமுடையீர் என்றும் பொருள் கொள்ளப்படும். “தனத்தீர்” என்றது ஈண்டுப் பெண்ணைக் குறிக்கும்போது, ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி என்க. எற்றைத் தினத்தும் மதியம் தேய்கிறது. - கூடும் நாள், பிரியும் நாள் என்ற எந்நாளிலும் அறிவு தேய்கிறது என்பது, கூடுங்கால் புணர்ச்சியவசம் தோன்றி அறிவைக் குறைப்பதும், பிரியுங்கால் அருமையும் ஆற்றாமையும் தோன்றி அறிவைக் குறைப்பதும் செய்தலின், “எற்றைத் தினத்தும் மதியம் தேய்கின்றது” என்று கூறுகின்றார்.

     இதன்கண், உமை விழைந்தார் ஊரில் இரவில் கமலம் விரிந்து குமுதம் குவிதலாகிய வியப்புளது என்றாட்கு, உமை விழைந்தார் ஊரில் எற்றைத் தினத்தும் மதி தேய்கிறது; இவ்வியப்பு உளது என்றாராம்.

     (124)