1898. என்னா ருயிர்க்குப் பெருந்துணையா
மெங்கள் பெருமா னீரிருக்கு
நன்னா டொற்றி யன்றோதா
னவில் வேண்டு மென்றுரைத்தேன்
முன்னா ளொற்றி யெனினுமது
மொழித லழகோ தாழ்தலுயர்
விந்நா னிலத்துண் டென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; எனது அரிய வுயிர்க்குப் பெரிய துணையாக இருக்கும் எங்கள் பெருமானாகிய நீவிர் இருக்கும் நல்ல நாட்டு இவ்வூர் ஒற்றியன்றோ, நவில வேண்டும் என்று கேட்டேனாக, முன்னை நாளில் இஃது ஒற்றி வைக்கப்பட்ட வூர்தான்; என்றாலும், அதனை இந்நாளில் உரைப்பது அழகாகுமா; ஆகாது; நான்கு நிலமாகப் பகுக்கப்படும் இவ்வையத்தில் உயர்ந்தது தாழ்தலும் தாழ்ந்தது உயர்தலும் இயல்பு என இயம்புகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
அறிவுடைய பொருளாதல் பற்றி உயிரை “ஆரூயிர்” என்கின்றார். மலத்தால் கட்டுண் டலமரும் உயிர்க்கு ஒன்றாயும் உடனாயும் இருந்து அறிவுத்துணை புரிவதால் பெருமை பிறங்குவது கொண்டு “பெருந்துணையாம்” என்று புகழ்கின்றார். 'பெருமான்' என்றது ஈண்டுத் தலைவர் என்னும் பொருளில் வந்தது. நாடு, ஈண்டு முதலிற் கூறும் சினையறி கிளவியாய் ஊர் மேலதாயிற்று. ஊர்களால் மலிந்தது உலகம் என்ற கருத்தில், “ஊர் பரந்த உலகு” (பிரமபுரம்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. ஊர் பல கொண்டது நாடு; நாடு பல கொண்டது உலகம் என அறிக. ஒற்றி வைத்தலை இந்நாளில் அடகு வைப்பதென்பர். அது பொருளாக எழுதப் படும் சாசனத்தை அடைமானம் என்பர். முன்னை நாளில் அடைமானத்தை ஒற்றிக் கலம் என்றனர். ஒற்றி வைத்தல், மக்களிடையே தாழ்வுடைச் செயலாகக் கருதப்பட்டது. அதனைக் கருத்திற்கொண்டே, “நீர் இருக்கும் நன்னாடு ஒற்றியன்றோ நவில வேண்டும்” என்று வினவுகின்றாள். நம்பியாரூரரும், “ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ“ (சோடிக். 8) என்றும், “ஒற்றியூரேல் உம்மதன்று” (ஓணகா) என்றும் பாடுவது காண்க. முன்னொரு காலத்தே ஒற்றி வைக்கப்பட்ட அது இன்றும் அத்தகையது என்று கூறுவது பொருந்தாது என்றற்கு, “முன்னாள் ஒற்றி எனினும் மொழிதல் அழகோ” என்றும் உயர்வு தாழ்வுகள் ஒருகாலும் நிலை பேறுடையவல்ல; உயர்வு தாழ்தலும் தாழ்வு உயர்தலும் இந் நிலவுலகிற்கு இயல்பு என்றற்குத் “தாழ்தல் உயர்வு இந்நானிலத்து உண்டு” என்றும் உரைக்கின்றார். நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு கூறுகளை யுடைய நிலம். நம் நாட்டில் பாலை கிடையாது. வடபுலத்தில் இமயமலைப் பகுதி ஒரு காலத்தே தாழ்ந்த கடலாகவும், தென்குமரிக்குத் தெற்கிலுள்ள கடற்பகுதி உயரிய நிலப்பகுதியாகவும் இருந்தன என நிலவரலாறு உரைப்பதொன்றே தேவரது திருமொழியின் உண்மைக்குச் சான்றாம் என்றுணர்க.
இதன்கண், நீர் இருக்கும் நாடு ஒற்றியன்றோ நவில வேண்டும் என்றாட்கு, முன்னாள் ஒற்றி யெனினும் இன்று அதனைக் கூறல் அழகன்று; உயர்வு தாழ்வுகள் நானிலத்துக்கு இயல்பு என்றாராம். (127)
|