19. ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
ளமுதுண்டு உவந்த திருவாய்
அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
யணிந்தோங்கி வாழுந்தலை
மெய்யநின் திருமேனி கண்டபுண்ணியர் கண்கள்
மிக்கவொளி மேவு கண்கள்
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
விழாச்சுபம் கேட்கும்செவி
துய்யநின் பதமெண்ணு மேலோர்க ணெஞ்சமெய்ச்
சுக ரூபமான நெஞ்சம்
தோன்றலுன் றிருமுன் குவித்த பெரியோர் கைகள்
சுவர்ண மிடுகின்ற கைகள்
சையமுயர் சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: மலையினும் புகழால் உயர்ந்த சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலில் எழுந்தருளும் கந்த வேட் கடவுளே, தண்ணிய ஒளியுடைய தூய மணிகளுட் சிறந்த சைவமணியாகிய சண்முகத் தெய்வமணியே, ஐயனே, நின்னுடைய புகழைப் பேசுகின்ற செல்வர்களின் வாய், நல்ல தெளிந்த அமுத முண்டு மகிழும் திருவாயாகும்; அப்பனே, நினது திருவடியை வணங்கினவர் தலை, மணி முடி யணிந்து சிறப்புற்று வாழும் தலையாகும்; மெய்யனே, நினது உருவத் திருமேனி கண்டு களிக்கும் புண்ணியர்களின் கண்கள், மிகுந்த அருளொளி பொருந்திய கண்களாம்; வேலவனே, நினது புகழைப் பிறர் சொல்லக் கேட்கும் வித்தகருடைய காதுகள், மணவிழா முதலிய சுபச்செய்திகளையே கேட்கும் திருச்செவிகளாகும்; தூயவனே, நின் சீரிய பாதத்தை மனத்தில் எண்ணும் மேலோர்களின் நெஞ்சம், மெய்யான சுக வடிவான நெஞ்சமாகும்; தோன்றலாகிய நின் திருமுன் நின்று பரவிக் குவித்த பெருமக்களின் கைகள், பொன்னை வழங்கும் கைகளாம் எனின், அம் மேன்மக்களின் மேன்மையை வேறு கூறுவ தென்னை, எ. று.
சையம் - மலை. புகழ்க்குரியன பொதியிலும் இமயமு மாதலின், அவற்றினும் புகழால் உயர்ந்தமை தோன்ற, “சையமுயர் சென்னை” எனச் சாற்றுகின்றார். ஐயன் - தலைவன். சீர் எனப் பொதுப்பட மொழிதலால், பொய்யில் பொருள் சேர்புகழ் எனக்கொள்க. அதனை யுணர்ந்து வாயாற் பேசுவது அருட்செல்வர்க்கே இயலுவதாதலால், அவர்களைச் “செல்வர்” என்றும், செல்வர் உண்பது தெள்ளிய ஞானவமுதமாகு வெனற்கு “நல்ல தெள்ளமுதுண்டு உவந்த திருவாய்” என்றும் புகழ்கின்றார். அப்பன்-தந்தை. திருவடி வணங்குதலின் பயனாக வணங்குவோர் முடி வேந்தராக விளங்குவர் என்பாராய், “முடியணிந்தோங்கி வாழும் தலை” என்று மொழிகின்றார். புண்ணியக் கண்ணுடையார்க்கன்றி முருகப்பெருமான் திருமேனி காணும் காட்சி எய்தா தென்பது கொண்டு “நின் திருமேனி கண்ட புண்ணியர்கள்” என்றும், அவரது பார்வையில் அருளொளி திகழ்வதால் “மிக்க ஒளி மேவு கண்கள்” என்றும் இயம்புகிறார். முருகன் ஏந்தும் வேற்படையை ஞான சத்தி எனச் சான்றோர் புகழ்வதால், “வேல நின் புகழ் கேட்ட வித்தகர்” என விளம்புகிறார். வித்தகர் - ஞானிகள். விழாச் சுபம் என்பதைச் “சுபவிழா” என மாற்றித் திருமணம் முதலிய மங்கல நல்விழாக்கள் எனக் கொள்க. தூயன் என்பது துய்யன் எனவும் வழங்கும். முருகன் திருவடியை எண்ணும் உள்ளம் செம்மை சான்று மேன்மை எய்துதலின், “நின்பதம் எண்ணும் மேலோர்” என்றும், அவர்கள் எப்போதும் சத்துவ குணமே யுற்றிருத்தலால், அவர் நெஞ்சத்தை “மெய்ச் சுக ரூபமான நெஞ்சம்” என்றும் உரைக்கின்றார். சத்துவ குணம் சுகரூபம் என அறிக. தோன்றல்-தலைவன். முருகப் பெருமான் திருமுன் கைகூப்பி வணங்குபவர் எல்லாப் பெருமைக்கும் உரிய ரென்பது பற்றி, “நின் திருமுன் கை குவித்த பெரியோர்” எனவும், பொன்னும் பொருளும் இல்லார்க் கீத்துப் புகழ் பெறுமாறு விளங்கப் பெரியோர் கை “சுவர்ண மிடுகின்ற கைகள்” எனவும் இசைக்கின்றார். ஏனைய குறிப்பெச்சம்.
இதனால் முருகன் சீர் பேசும் செல்வர் முதல் அவன் திருமுன் கைகூப்பித் தொழும் பெரியோர் ஈறாக வரும் நல்லோர் சிறப்புக் கூறியவாறாம். (19)
|