1900. செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர்
திகழாக் கரித்தோ லுடுத்தீரே
யும்மை விழைந்த மடவார்க
ளுடுக்கக் கலையுண் டோவென்றே
னெம்மை யறியா யொருகலையோ
விரண்டோ வனந்தங் கலைமெய்யி
லிம்மை யுடையே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; செவ்விய வளம் பொருந்திய திருவொற்றியூருள் இருப்பவரே, விளக்கமில்லாத கரிய யானைத் தோலை உடுத்திருக்கின்றீரே, உம்மை விரும்பியடைந்த இளமகளிர் உடுத்தற்கு உம்பால் கலைகள் உள்ளனவோ என்று வினாவினேன்; எனக்கு, எம்மை நீ நன்கு அறிந்திலை; அறிந்தால் இவ்வாறு வினவமாட்டாய்; எம்மிடத்தில் ஒன்றா இரண்டா; அநேகம் கலைகள் மெய்யாக இங்கு உள்ளன என விடை கூறுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
செம்மை - செல்வம். கரித்தோல் - யானைத்தோல். கரிய நிறமுடைய தோலின்கண் விளக்கமின்மை பற்றித் “திகழாக் கரித்தோல்” என்று சிறப்பிக்கின்றார். மடவார் - இளமகளிர். மடமை - இளமை மேற்று. கலை - சேலை. தம்மையடைந்த மகளிர்க்கு உடுக்கவுடையும் உண்ணவுணவும் தருவது கணவருக்கு கடமை; அதனால், “உம்மை விழைந்த மடவார்கள் உடுக்கக் கலையுண்டோ” எனப் பலியிடும் நங்கை வினாவுகின்றாள். அனந்தம் - எண்ணிறந்தது. ஒன்று, இரண்டு பல என்பது வடமொழியின் பொதுமரபு. சேலை என்ற பொருளில் கலையுண்டோ என்று வினாவியவட்குச் சாத்திரம் என்ற பொருளில் தன்னைப் பொருளாகக் கொண்ட கலைகள் எண்ணிறந்தன என்றற்கு, “அனந்தம் கலை உடையேம்” என்று கூறுகின்றார். கலையெலாம் அவன் என்றலின் “கலை அனந்தம் மெய்யில் உடையேம்” என்கின்றார். “கலையவன் மறையவன்” என ஞானசம்பந்தரும், “கலையாரும் நூலங்கமாயினான்காண் கலைபயிலும் கருத்தன் காண்க” என நாவரசரும் கூறுவது காண்க. வேறுவகையிற் கூறப்படும் பொருள் சிறவாமை அறிந்து கொள்க. இம்மை - இங்கு.
இதன்கண், கலையுண்டோ என்றாட்கு, அனந்தம் கலை மெய்யில் உடையேம் என்று உரைத்தவாறாம். (129)
|