1901. கற்றைச் சடையீர் திருவொற்றிக்
காவ லுடையீ ரீங்கடைந்தீ
ரிற்றைப் பகலே நன்றென்றே
னிற்றை யிரவே நன்றெமக்குப்
பொற்றைத் தனத்தாய் கையமுதம்
பொழியா தலர்வாய்ப் புத்தமுத
மிற்றைக் களித்தா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: திருவொற்றியூரைக் காத்தலை யுடையவரே, கற்றையான சடையையுடையவரே, இவண் வந்தீராதலால் இன்றைய பகற்பொழுது நன்று என்று சொன்னேனாக, குன்று போன்ற கொங்கையையுடையவளே, இப்போது கையால் அமுதம் சொரியாது வாயாற் புதிய சொல்லமுதம் அளித்தாயாகலின், எமக்கு இன்றை இரத்தற்கமைந்த பொழுது நன்றாயிற்று, காண் என மொழிகின்றார்; இதுதான் என்னே. எ.று.
உண்பலி வேண்டி வருபவர்க்குப் பகற்போது தக்கது என்ற கருத்தால், ஈங்கு அடைந்தீர் இற்றைப் பகலே நன்று என்றே னாக, பிச்சைத் தேவர், நான் கூடற்குக் கூறியதாகக் கொண்டு “இற்றை யிரவே எமக்கு நன்று” என மொழிகின்றார். மேலும் நான் நன்றென்றது, கூடற்கு இணங்கி மொழிந்ததாகப் பொருள் கொண்டு, கையமுதம் பொழியாது வாய்ப்புத்தமும் அளித்தாய் என்கின்றார் எனச் சொல்லுகின்றாள். அலர்வாய் - மலர்போன்ற வாய். வாய் அமுதம் - வாயாற் சொல்லப்படும் அமுதம் போன்ற சொல். “தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல், எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை” (தொல். பொ. 118) யாயினும், “இற்றைப் பகலே நன்று” என மொழிந்தது புதுமையாதலால், அதனைப் புத்தமுதம் எனப் புகல்கின்றார். கையமுதம் பொழியாது அலர்வாய்ப் புத்தமுதம் அளித்தாய் என்றதற்குச் செவிகைக்கும் மறுப்புரை நல்காமல் மலர் வாயால் அமுதம் போன்ற இசைவுமொழி அளித்தாய் எனப் பொருள்பட உரைக்கின்றார்.
இதன்கண், பகல் நன்றென்றாட்கு இரவு நன்றென்றும், நன்றென்றது புத்தமுதம் அளித்தவாறென்றும் உரைத்தாரா மென்க. (130)
|