1902. கற்றீ ரொற்றீர் முன்பொருவான்
காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை
விற்றீ ரின்றென் வளைகொண்டீர்
விற்கத் துணிந்தீ ரோவென்றேன்
மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர்
மனையின் வளையைக் கவர்ந்துகளத்
திற்றீ தணிந்தா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; ஒற்றியூர்ப் பிச்சைத்தேவரே, நீவிர் நன்கு கற்றவராயிருக்கின்றீர்; முன்பு ஒருகால் தாருகவனம் என்ற பெரிய காட்டில் வாழ்ந்த முனிமகளிர் கைவளைகளைக் கவர்ந்ததோடு, ஒப்பரிய பாண்டி நாட்டு மதுரைநகர் வீதியில் வளையல் விற்றீர்; இப்பொழுது என் கைவளை நெகிழ்ந்தோடச் செய்கின்றீர்; இவற்றையும் விற்கத் துணிந்தீரோ என்று கேட்டேனாக, குளிர்ந்த கூந்தலையுடையவளே, எம்முடைய ஒரு மனைவியின் மனைக்குட் சென்று வளை கவர்ந்து போந்து கழுத்தில் அணிந்து கொண்டாய்; இது தீது என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
வான்காடு - பெரிய காடு; தாருக வனம். அங்கே தவம் புரிந்து வாழ்ந்த முனிவருடைய மகளிர் நிறைகெடுமாறு சிவன் பலிவேண்டிச் சென்று வளைகொண்டதைக் கந்தபுராணம், “பால் அளையினோடுறும் ஓதனம் அங்கை வீழ் வளையினோடு வழங்குகின்றார்” (ததீசி. யுத். 55) என்பது காண்க. மதுரை நகரத்தெருவில் வளை விற்றபோது, “இவ்வளை போல் வளை யாமுன் கண்டிலேம், மெய்வளை வணிகீர், இவ்வரிய வெவ்வளை எவ்வயின் உள்ள, இன்றினியவாகி எம் மெய்ம்மயிர் பொடிப்பெழு வீக்கம் செய்தவே” என வாங்கிய மகளிர் உரைத்தனரென்பர். இதனை, “முன்பு ஒரு காட்டிற் கவர்ந்து ஓர் நாட்டில் வளைவிற்றீர்” என்று உரைக்கின்றார்கள். தாருகவனத்து வளையிழந்த மகளிரே மதுரையில் வணிக மகளிராய்த் தோன்றி வாங்கியணிந்து கொண்டமையின், காட்டிற் கவர்ந்து நாட்டில் விற்றீர் என ஒரு தொடராய் உரைக்கின்றாள் பலியிடும் நங்கை. முன்பு செய்ததுபோல இன்று என் கைவளையைக் கவர்ந்துகொண்டுபோய் விற்க நினைக்கின்றீர் போலும் என்பாளாய், “என்றன் வளைகொண்டீர் விற்கத் துணிந்தீரோ” என்று கேட்கின்றாள். நெய்ப்பசை விளங்கும் கூந்தலை யுடையாளை ஈர்ங்குழலாய் எனக் கூறுகின்றார். திருமாலும் சிவனுக்கு ஒரு மனைவியாதலின், அவரை, “எம் ஓர் மனை” என்றும், அவர் கையில் ஏந்தும் சங்கினை “வளை” என்றும், அவ்வளையை இளமகளிரின் கழுத்திற்கு உவமை கூறும் அணி மரபு பற்றி, “வளையைக் கவர்ந்து களத்தில் அணிந்தாய்” என்றும் இசைக்கின்றார். களம் - கழுத்து. அவ்வளையின் ஒப்புமையும் வனப்பும் உன் கழுத்தில் பொருந்துமாறு கள்ளத்தனமாய் செய்து கொண்டாய் என்றலும் ஒன்று. அப்பொருட்குக் கள்ளம், களம் என வந்ததாம்.
இதன்கண், என்றன் வளை கொண்டீர் என்றாட்கு, நீ எம் ஓர் மனையின் வளையைக் கவர்ந்து உன் களத்தில் அணிந்து கொண்டாய்; இது தீது என்றாராம். (131)
|