1903. உடுக்கும் புகழா ரொற்றியுளா
ருடைதா வென்றார் திகையெட்டு
முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ
வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
முடுக்கும் பெரிய வரைச்சிறிய
வொருமுன் றானை யான்மூடி
யெடுக்குந் திறங்கண் டென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; உலகத்தை உடையால் மூடியதுபோலப் புகழ்பரப்பிய திருவொற்றியூரையுடைய பிச்சைத்தேவர், எனக்கு உடை தருவாயாக என்று கேட்டாராக, திசை யெட்டினையும் உடையாகவுடுக்கும் பெரியவராகிய நீவிர் எதுகண்டு என்பால் உரைக்கின்றீர் என்று வினவினேன்; திசை முற்றும் தாங்கும் பெரியவரையைச் சிறியவொரு முன்றானையால் மூடி மறைத்துத் தாங்கும் திறம் கண்டே என இசைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
வெள்ளாடை கொண்டு நிலப்பரப்பை மூடுவதுபோலத் தேவ தேவனான சிவனது புகழ் பரவியிருப்பது பற்றிக் குறிப்புருவகமாக “உடுக்கும் புகழ்” என்று சிறப்பிக்கப்படுகிறது. கடல் சூழ்ந்த நிலவுலகைக் கடலுடுத்த நிலம் என்பதுபோல, உலகெங்கும் சூழ்ந்துள்ள புகழை “உடுக்கும் புகழ்” என்கின்றார்கள் எனினுமாம். பலிவேண்டி வருபவர் உடை தருக என்றது பலியிடும் நங்கையின் நினைவைத் தூண்டினமையால், திகையெட்டையும் ஆடையாகக் கொள்ளும் பெரியவராகிய நீர் என்பால் எத்தன்மையைக் கண்டு உடை தருக என்று கேட்கின்றீர் என்பாளாய், “திகையெட்டும் உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர்” என்று வினவுகின்றாள். திக்குகளை உடையாக (அம்பரமாக) உடுப்பவர் என்ற கருத்தில் பரமனுக்குத் திகம்பரன் என்ற பெயர் வழங்குகிறது. திசையனைத்தையும் தாங்கும் வகையில் சக்கரவாளம் என்ற பெரிய மலையுளது எனப் புராணம் கூறுகின்றன; வீறுகோள் அணிவகையில் சக்கரவாளகிரியை மகளிர் கொங்கைக் குவமம் செய்வது இடைக்காலக் கவிஞர் மரபு. அக் கொங்கைகளை உடுக்கும் உடையின் ஒரு முன்றானை கொண்டு மூடி மறைத்துத் தாங்கும் தன்மை காணப்படுதலால், உடை தருக என்று கேட்டேமென்பாராய். “திகை முழுதும் உடுக்கும் பெரியவரைச் சிறியவொரு முன்றானையால் மூடி எடுக்கும் திறம் கண்டு” என உரைக்கின்றார். திசை - திகை என வந்தது. திகை முழுதும் உடுக்கும் பெரியவரை, நேமி மால்வரை; சக்கரவாளகிரி உவமமாகும் மரபுபற்றி, நங்கையின் கொங்கையைத் “திகைமுழுதும் உடுக்கும் பெரியவரை” என்று கூறுகின்றார். வரை என்றவிடத்துச் சகரவொற்று ஓசையின்பம் குறித்து வந்தது. எடுத்தல் - தாங்குதல்.
இதன்கண், உடை தா என்றார்க்கு, உடை கேட்டது எது கண்டு என மறுவலும் வினவினாட்குப் பெரிய வரையே ஒரு முன்றானையால் மூடி யெடுக்கும் திறம் கண்டு என உரைக்கின்றார் என்பதாம். (132)
|