1904. காவா யொற்றிப் பதியுடையீர்
கல்லா னைக்குக் கரும்பன்று
தேவாய் மதுரை யிடத்தளித்த
சித்த ரலவோ நீரென்றேன்
பாவா யிருகல் லானைக்குப்
பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ
யீவா யிதுசித் தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; சோலைகள் வாய்த்த திருவொற்றியூரையுடைய தேவரே, தெய்வப் புகழ்பெற்ற மதுரையில் அந்நாளில் கல்லாகிய யானையைக் கரும்புண்ணச் செய்த சித்தர் அல்லவோ நீர் என்று கேட்டேனாக, பாவை போல்பவளே, நீ கல்லானைகட்கு அன்புடன் இங்கே இரண்டு கரும்புகளைத் தருகின்றாய்; இது எமது சித்தினும் பெரிது என்று இசைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
கா - சோலை. வாய்த்தல் - வளமாக வளர்தல். தேவாய் மதுரை - தேவ தேவனாகிய சிவபெருமான் திருவிளையாடல் பல விரும்பிச் செய்த புகழ் படைத்த மதுரை. மதுரையில் சிவன் செய்த திருவிளையாடல்களில் சித்தராய்த் தோன்றிக் கல்லானைக்குக் கரும்பு அளித்தது ஒன்று. அதை நினைவிற் கொண்டுதான், “மதுரையிடத்து அன்று கல்லானைக்குக் கரும்பு அளித்த சித்தர் அலவோ” என்று கேட்டாள். நங்கையின் கொங்கைகள் கல்போல் இறுகி யானைக் கொம்புபோல தோன்றுவது பற்றிக் கல்லானைகள் எனப் பட்டன. ஒருநீ - ஒருத்தியாகிய நீ. கொங்கைகள் மறையும்படி கைகளைக் கட்டிக்கொண்டு நின்றமை கண்டு, கொங்கைகளான கல்லானைகட்குக் கரும்பு போன்ற தோள்களைத் தந்துள்ளாய் என்று கூறுகின்றார். மகளிர் தோள்கட்குக் கரும்பை உவமம் செய்வர்.
இதன்கண், மதுரையில் அன்று கல்லானைக்குக் கரும்பு அளித்த சித்தரல்லவோ என்றாட்கு, இங்கே இரண்டு கல்லானைகட்கு இரண்டு கரும்புகளைத் தருகின்றாய்; எனவே, எம்மினும் நீ சித்து மிகவுடையை என்று உரைத்தவாறாம்.
(133)
|