1905. ஊட்டுந் திருவா ழொற்றியுளீ
ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத்
தாட்டுந் திறத்தீர் நீரென்றே
னணங்கே யிருசெப் பிடையாட்டுந்
தீட்டும் புகழன் றியுமுலகைச்
சிறிதோர் செப்பி லாட்டுகின்றா
யீட்டுந் திறத்தா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; செல்வவகை பலவும் தந்து நுகர்விக்கும் திருமகள் வாழும் திருவொற்றியூரில் உள்ளவரே, நீவிர், உயிர்களை உடம்பாகிய செப்பில் வைத்து ஆட்டுவிக்கும் திறமுடையவரன்றோ என்று சொன்னேனாக, பெண்ணனங்கே, செப்பு இரண்டில் வைத்து ஆட்டுகிறாய் என்ற புகழேயன்றி, இவ்வுலகையே உனது ஒரு சிறிய சொல்லால் ஆட்டுகின்றாய்; இவ்வகையில் பொருளாவன ஈட்டும் திறம் வல்லவளாவாய் என்று உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
பொருளைச் சேர்ப்பிக்கும் திரு வேறு; அதனை நுகர்விக்கும் திரு வேறு; இரண்டும் ஒருங்கே அமைவது அருமையாகும். அன்றியும், ஈட்டும் திருவினும் ஊட்டும் திரு சிறப்புமிக்கதாகலின், அதனை விதந்து, 'பாட்டும் திருவாழ் ஒற்றியூளீர்” என்று உரைக்கின்றாள். செப்பு - மரத்தால் ஆகும் குங்குமச் செப்பு. உயிரை உடம்பின்கண் வைத்து ஆட்டுதலாவது, உயிரை உடம்பொடு கூடி யான் எனது என்ற உணர்வுகளால் அறிவன அறிதலும், செய்வன செய்தலும் செய்து வாழச்செய்தல். இதனை, “யான் எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாய்” என்று மாணிக்கவாசகர் சிவபெருமானைக் குறிப்பதனால் அறியலாம். கண்டார் உளத்தில் காமவேட்கை யுறுவித்து வருத்துவது பற்றி இளம்பெண்ணை அணங்கு என்பது மரபு. “அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை, மாதர் கொல் மாலும் என்நெஞ்சு” என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. செப்பு, சொல்லென்று பொருள்படுவதோடு, மகளிர் கொங்கைக்கு உவம மாகவும் கூறப்படும். கொங்கைகளாகிய இரு செப்புக்களில் உலக மக்களின் கருத்தைப் பிணித்து வைத்து ஆட்டுவதும், ஒரு சிறு சொல்லாகிய செப்பால் உலகனைத்தையும் ஏவல் கொள்வதும் உன்னால் ஆகின்றன; இவ்வாற்றால் உன்பால் ஊட்டும் திருவேயன்றி பொருள் பலவும் ஈட்டும் திருவும் இனிது பொருந்தியுள்ளன என்பாராய், “இரு செப்பிடை யாட்டும் புகழன்றியும் உலகைச் சிறிதோர் செப்பில் ஆட்டுகின்றாய்” என்றும், “ஈட்டும் திறத்தாய்” என்றும் இயம்புகின்றார். ஏட்டிலும் ஓவியக்கிழியிலும் எழுதப்படுவது பற்றித் “தீட்டும்புகழ்” என்றும், ஊட்டும் திரு முன்னர்க் கூறப்பட்டமையின் “ஈட்டும் திரு” என்றும் உரைக்கப்படுகின்றன. ஒரு சிறு சொல்லால் உலகை யாட்டுவதை, “ஒண்ணுதற்கு ஓஓ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என்பீடு” என வரும் ஆடவன் ஒருவன் கூற்றால் அறிக.
இதன்கண், உடலாகிய செப்பில் உயிரை வைத்து ஆட்டும் திறத்தீர் என்று சொன்ன நங்கைக்கு, பிச்சைத் தேவர், நீ இரு செப்பிடை வைத்து உலகனைத்தையும் ஆட்டும் புகழோடு ஒரு சிறு சொல்லில் அடக்கி யாட்டும் திறனும் உடையாய் என மொழிகின்றாராம். (134)
|