1906. கந்த வனஞ்சூ ழொற்றியுளீர்
கண்மூன் றுடையீர் வியப்பென்றேன்
வந்த வெமைத்தான் பிரிபோதும்
மற்றை யவரைக் காண்போதுஞ்
சந்த மிகுங்கண் ணிருமூன்றுந்
தகுநான் கொன்றுந் தானடைந்தா
யிந்த வியப்பென் னென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடி, சேடி; மணமலர் நிறைந்த சோலை சூழ்ந்த திருவொற்றி யூர்க்கண் உள்ளவரே, நீர் கண் மூன்றுடையராயிருக்கின்றீர்; இது வியப்பாகவுளது என்று சொன்னேனாக, தன்னை நோக்கி வந்த எம்மைப் பிரியும் போதும் மற்றவரைக் காணும் போதும் அழகுமிக்க கண்ணாறும் தக்கவாறு அஞ்சு கண்ணும் உடையளாகின்றாய்; இந்த வியப்புக்கு என்ன சொல்வது எனவுரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
மலர் மணம் கமழ்வதுபற்றிக் “கந்தவனம்” எனக் கூறுகிறார். இயல்பாக உள்ள கண்கள் இரண்டுடன் நெற்றியில் ஒன்று இருத்தலின் “கண் மூன்றுடையீர்” என்றும், உலகமக்களிடையே மூன்று கண்ணுடையோர் இல்லாமையால், “வியப்”பென்றும் கூறினாள். காதலுற்றுப் போந்த தம்மைப் பிரியும் போது காதலியாகிய நின் கண்களில் நீர் ஆறாகப் பெருகிப் பாய்தலால் 'கண் ஆறு' என்பாராய், “வந்த எமைத்தான் பிரி போது சந்தமிகும் கண் இரு மூன்று” என்றும், காதலன்பில்லாத பிறரை “மற்றையவர்” என்றும், பிற ஆடவரைக் காணும்போது கண்களில் அச்சம் காணப்படுவதால் அஞ்சு கண் உடையாய் என்பாராய், “தகு நான்கு ஒன்றும் தான் அடைந்தாய்” என்றும் உரைத்து, இவ்வாறால், கண் மூன்றுடைமையினும் கண்ணாறும் அஞ்சு கண்ணும் உடைமை மிக்கவியப்பாம் என்றற்கு “இந்த வியப்பு என்” என்று இயம்புகின்றார். பிறரைக் கண்டவிடத்து அஞ்சுவது இளமங்கையர்க்குத் தகுதியாதலால் “தகு நான்கு ஒன்று தான் அடைந்தாய்” என உரைத்தார்.
இதன்கண், கண் மூன்றுடையீர் வியப்பு என்றாட்கு, நீ பிரிபோதும் பிறராயினாரைக் காண்போதும் முறையே கண் இரு மூன்றும், அஞ்சு கண்ணும் உடையை யாகின்றாய்; இது மிக்க வியப்பன்றோ என்றாராம். (135)
|